குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் விருத்தாசலம் அருகே பரபரப்பு
விருத்தாசலம் அருகே குடிநீர் வினியோகம் செய்யக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரபட்டினம் ஊராட்சிக்குட்பட்டது சின்னஆத்துக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து மின்மோட்டார் பொருத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்காக அருகில் உள்ள விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிக்கும் சென்று குடிநீர் பிடித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. பழுதடைந்த மின்மோட்டாரை சரிசெய்யகோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் விருத்தாசலம்-ஸ்ரீமுஷ்ணம் சாலையில் சின்னஆத்துக்குறிச்சி பஸ்நிறுத்தம் அருகே காலி குடங்களுடன் திரண்டனர். தொடர்ந்து அவர்கள் குடிநீர் வினியோகம் செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதையேற்ற அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story