தேனியில் கைவரிசை காட்டிய வாலிபரிடம் விசாரணை: 51 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்பு


தேனியில் கைவரிசை காட்டிய வாலிபரிடம் விசாரணை: 51 பவுன் நகைகள், வெள்ளி பொருட்கள் மீட்பு
x
தினத்தந்தி 10 Oct 2018 3:00 AM IST (Updated: 10 Oct 2018 1:11 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தப்பட்டது. அவரிடம் இருந்து 51 பவுன் நகைகள், வெள்ளி பொருட்களை போலீசார் மீட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

தேனி, 


தேனி கோட்டைக்களம் நேருஜி தெருவை சேர்ந்தவர் சுப்புரத்தினம் (வயது 73). இவர், தேனியில் உள்ள பிரபல நகைக்கடை உரிமையாளர் பிராம்சாய் என்பவருடைய மாமனார் ஆவார். கடந்த ஜூலை மாதம் இவர், தனது வீட்டை பூட்டிவிட்டு சேலத்தில் நடந்த உறவினர் திருமணத்துக்கு சென்றுவிட்டார். இந்நிலையில் பூட்டிக் கிடந்த வீட்டை நோட்டமிட்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த சுமார் 51 பவுன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து சுப்புரத்தினம் கொடுத்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். திருட்டு வழக்கில் தொடர்புடைய மர்ம நபர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், சரவணதேவேந்திரன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய தேனி அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கிரி (46), தேனி நியூஸ்ரீராம் நகரை சேர்ந்த வெங்கடேஷ் (38) ஆகிய 2 பேரையும் கடந்த 23-ந்தேதி கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன்கள் வினோத் என்ற வினோத்குமார் (32), ராம்குமார் (28) ஆகியோருடன் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர்.

அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது வினோத், ராம்குமார் ஆகிய இருவரும் வேறொரு திருட்டு வழக்கில் கைதாகி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சேலம் சிறையில் இருக்கும் வினோத்தை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தேனி போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

அவரை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோர்ட்டு அனுமதி அளித்தது. இதைத்தொடர்ந்து வினோத்தை தேனி தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அவர் பதுக்கி வைத்திருந்த தங்க நகைகள் மற்றும் வெள்ளிப் பொருட்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். 4 நாட்கள் போலீஸ் காவல் முடிந்ததை தொடர்ந்து அவரை நேற்று சேலம் சிறையில் அடைப்பதற்காக தேனி போலீசார் அழைத்து சென்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘வினோத், ராம்குமார் ஆகியோர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளன. வினோத் மீது சேலம், தருமபுரி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களிலும் திருட்டு வழக்குகள் உள்ளன. தேனியில் திருடிய நகைகளை திருப்பூண்டியை சேர்ந்த நகைக்கடைக்காரரிடம் கொடுத்திருந்தனர். அந்த நகைக்கடைக்காரரிடம் இருந்து சுமார் 51 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் வினோத்திடம் இருந்து 4 வெள்ளி டம்ளர்கள் மற்றும் திருட்டு நகைகளை விற்ற பணத்தில் வாங்கிய ஒரு கார் கைப்பற்றப்பட்டுள்ளது’ என்றார்.

Next Story