30-ந் தேதி வரை லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை ஆலோசனை கூட்டத்தில் முடிவு


30-ந் தேதி வரை லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வாகனங்கள் செல்ல தடை ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 10 Oct 2018 3:00 AM IST (Updated: 10 Oct 2018 1:33 AM IST)
t-max-icont-min-icon

லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வருகிற 30-ந் தேதி வரை வாகனங்கள் செல்ல தடை விதிப்பது என ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கூடலூர், 


கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் மழை காரணமாக மாதா கோவில் வளைவு, இரைச்சல் பாலம் மேலே உள்ள வளைவு உள்ளிட்ட 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் இந்த மலைப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த சாலை வழியாக இரு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதிக்கக்கோரி வியாபாரிகள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கூலித்தொழிலாளர்கள், பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களை சாலையின் குறுக்காக நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி ஆகியோர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.

இந்த பிரச்சினை தொடர்பாக கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் அவசர ஆலோசனை கூட்டம் ஆர்.டி.ஓ. ராஜன் தலைமையில் நடந்தது. உத்தமபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீமைச்சாமி, தாசில்தார் உதயராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நெடுஞ்சாலைத்துறை பொறியாளர் உவனேஷ், மக்கள் அதிகாார மாவட்ட செயலாளர் மோகன் மற்றும் வியாபாரிகள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதிகாரிகள் கூறும்போது ‘மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ள 3 இடங்களில் பணியாளர்கள், பொக்லைன் எந்திரங்கள் மூலம் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வருகிற 30-ந் தேதிக்குள் முடிக்கப்பட உள்ளது. இதனால் வாகன போக்குவரத்து தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நடந்து செல்பவர்களும் குறிப்பிட்ட காலங்கள் வரை இந்த பாதை வழியாக சென்று வருவதை தவிர்க்க வேண்டும். அதன்பிறகு வழக்கம்போல் போக்குவரத்து தொடங்கும் என்று கூறினர். இதை பொதுமக்களும், வியாபாரிகளும் ஏற்றுக்கொண்டனர்.

இந்தநிலையில் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் வருகிற 30-ந் தேதி வரை இரு சக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படுவதற்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

Next Story