டேங்கர் லாரி மோதியதில் தலைநசுங்கி ஓவியர் சாவு மனைவி படுகாயம்


டேங்கர் லாரி மோதியதில் தலைநசுங்கி ஓவியர் சாவு மனைவி படுகாயம்
x
தினத்தந்தி 10 Oct 2018 3:00 AM IST (Updated: 10 Oct 2018 1:55 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் டேங்கர் லாரி மோதியதில் ஓவியர் தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பழனி,


பழனி அருகேயுள்ள அழகாபுரி ராமமூர்த்திநகரை சேர்ந்தவர் அசோக் (வயது 54). ஓவியர். இவர் நேற்று அதிகாலை தனது மனைவி ஆனந்தியுடன் (48) மொபட்டில், பழனி முருகன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அங்கு 2 பேரும் சாமி தரிசனம் செய்து விட்டு, காலை 8 மணி அழகாபுரிக்கு புறப்பட்டனர்.

பழனி சண்முகநதி பஸ் நிறுத்தம் அருகே 2 பேரும் மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஒரு டேங்கர் லாரி வேகமாக வந்தது. மேலும் திடீரென அந்த டேங்கர் லாரி, மொபட் மீது மோதியது. இதில் லாரியின் பின்சக்கரத்தில் சிக்கிக் கொண்ட அசோக் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மேலும் அவருடைய மனைவி ஆனந்தி படுகாயம் அடைந்தார். இதையடுத்து ஆனந்தி, பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதற்கிடையே விபத்து ஏற்படுத்திய டேங்கர் லாரி நிற்காமல் சென்றது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் பிற வாகனங்களில் துரத்தி சென்று பழனியில் லாரியை மடக்கி, போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பழனி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டேங்கர் லாரி டிரைவரான சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த பனைமடல் கிராமத்தை சேர்ந்த நல்லதம்பி (24) என்பவரை கைது செய்தனர். இதுபற்றி மேலும் விசாரித்து வருகின்றனர்.

Next Story