வேடசந்தூர் அருகே கழிப்பறைக்கு தண்ணீர் கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல்


வேடசந்தூர் அருகே கழிப்பறைக்கு தண்ணீர் கேட்டு கல்லூரி மாணவர்கள் மறியல்
x
தினத்தந்தி 10 Oct 2018 3:15 AM IST (Updated: 10 Oct 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

வேடசந்தூர் அருகே கழிப்பறைக்கு தண்ணீர் வசதி கேட்டு கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேடசந்தூர், 

வேடசந்தூர் தாலுகா தண்ணீர்பந்தம்பட்டியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உறுப்புக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரிக்கு 2 ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கழிப்பறைக்கு செல்லும் தண்ணீர் குழாய் சேதமடைந்து விட்டது.

இதனால் கழிப்பறைக்கு சரியாக தண்ணீர் வரவில்லை என்று மாணவர்கள் புகார் கூறி வந்தனர். எனினும், குழாயை சரிசெய்து தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து வெளியேறினர். பின்னர் வேடசந்தூர் - எரியோடு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பானு, ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து தரவேண்டும் என்று மாணவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து சேதமான குழாயை சரிசெய்ய விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். அதன்பேரில் மாணவர்கள் மறியலை கைவிட்டு கல்லூரி வளாகத்துக்குள் சென்றனர். இதற்கிடையே ஊராட்சி மன்ற உதவியாளர் பாஸ்கரன், ஊராட்சி ஒன்றிய உதவியாளர் பாபு ஆகியோர் கல்லூரிக்கு வந்தனர். கல்லூரி முதல்வர் வைரவேல் முன்னிலையில் மாணவர்களிடம், அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிப்பறைக்கு செல்லும் குழாயை சீரமைத்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்வதாக கூறினர். அதன்பின்னரே மாணவர்கள் சமரசம் அடைந்து வகுப்பறைக்கு திரும்பினர்.


Next Story