சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட சிறுமிகளுக்கு அரசு விருது கலெக்டர் தகவல்
சமூக முன்னேற்றத்துக்கு பாடுபட்ட சிறுமிகளுக்கு தமிழக அரசு விருது வழங்கப்படுகிறது என்று நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல்லை,
பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்துக்கு சிறப்பாக பங்காற்றும் 18 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி மாதம் 24-ந்தேதி மாநில அரசு விருதுக்கான காசோலை ரூ.1 லட்சம் மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது.
இதற்கு 5 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளாகவும், வீர-தீர செயல் புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். பெண் கல்வி, பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வேறு ஏதாவது வகையில் சிறப்பான, தனித்துவமான சாதனை செய்திருக்க வேண்டும். சமூக அவலங்கள் மற்றும் அதற்கு தீர்வு காண்பதற்கு புத்தகங்கள் மற்றும் கையேடுகள் எழுதி வெளியிட்டிருக்க வேண்டும். ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பது போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதனை செய்திருக்க வேண்டும்.
மாநில அளவிலான தேர்வுக்குழுவின் ஆய்வுக்கு பிறகு இந்த விருதுக்கு உரிய நபர் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்கு தகுதி உடைய சிறுமிகளின் விவரங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் வருகிற 15-ந்தேதிக்குள் நெல்லை மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story