மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது


மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சியில் மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சியில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வந்ததை தொடர்ந்து, திருடர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், போலீஸ் தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். அதன்படி, மாநகரில் பல்வேறு இடங்களில் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தனிப்படையினர் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் மெயின் ரோட்டில் கிராப்பட்டி மேம்பாலம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 நபர்கள், போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்றனர். அவர்கள் இருவரையும் பிடித்து விசாரிக்க, மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் மணிகண்டன் (வயது 34) என்பதும், ராமச்சந்திரா நகர் நத்தர்நகரை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. கடந்த 5-ந் தேதி மணிகண்டன், தன்னுடன் வந்த 16 வயது சிறுவனுடன் சேர்ந்து ராமச்சந்திரா நகரில் டீக்கடை அருகில் தாங்கள் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து மணிகண்டன் மற்றும் அவருடன் வந்த சிறுவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கடந்த 4-ந் தேதி கிராப்பட்டியில் உள்ள சூப்பர் மார்க்கெட் அருகில் மேலும் ஒரு மோட்டார் சைக்கிள் திருடியதையும் அவர்கள் ஒப்புக்கொண்டனர். அதைத்தொடர்ந்து 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

அதே இடத்தில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மேலும் 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற தால் அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை செய்யப்பட்டது. அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டிவந்தவர் தாமஸ் (20) என்பதும், தீரன்மாநகர் ஆலம்பட்டிரோடு யு-பிளாக், வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரும், தன்னுடன் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து வந்த அவரது 16 வயது சிறுவனும் காந்தி நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடியதாக ஒப்புக்கொண்டார். ஏற்கனவே, தாமஸ் மீது கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவில் ஒரு மோட்டார் சைக்கிள் திருட்டு வழக்கும், எடமலைப்பட்டிபுதூரில் பணத்திருட்டு வழக்கும் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. தாமஸ் வசம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அவரையும், 16 வயது சிறுவனையும் கைது செய்தனர்.

மோட்டார் சைக்கிள் திருடர்கள் மணிகண்டன், தாமஸ் ஆகியோர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 2 சிறுவர்களும் சிறுவர் சீர்த்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Next Story