சேலம் மாநகராட்சியில் வரி உயர்வை ரத்து செய்ய கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனுகொடுக்கும் போராட்டம்


சேலம் மாநகராட்சியில் வரி உயர்வை ரத்து செய்ய கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனுகொடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 4:15 AM IST (Updated: 10 Oct 2018 2:53 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகராட்சியில் வரி உயர்வை ரத்து செய்ய கோரி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர்.

சேலம்,

சேலம் மாநகர ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கந்தசாமி, செயலாளர் பிரவீன்குமார், பொருளாளர் வெங்கடேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி சதீஷ்குமார் வரவேற்றார்.

இதைத்தொடர்ந்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோட்டை மைதானத்தில் இருந்து ஊர்வலமாக வந்து மாநகராட்சி அலுவலகம் முன்பு வந்து போராட்டம் நடத்தினர். பின்பு அங்கிருந்த போலீசார் 5 பேரை மனு கொடுக்க அனுமதித்தனர். அவர்கள் மாநகராட்சி ஆணையாளர் சதீஷிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வரி வசூல் மாற்றியமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனால் சேலம் மாநகராட்சி பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் வீடுகளுக்கு 50 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை, வணிக கட்டிடங்களுக்கு 100 சதவீதம் வரை உயர்த்தி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வினால் சாதாரண ஏழை எளிய, நடுத்தர மக்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வீட்டு வாடகை, கடை வாடகை தொகை பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது. குறிப்பாக வாடகை கட்டிடங்களில் உள்ளவர்களின் வாழ்வு கேள்வி குறியாகியுள்ளது. ஏற்கனவே வேலையின்மை, விலைவாசி உயர்வினால் அவதிப்படும் பொதுமக்களின் தலையில் பேரிடியாக இந்த வரி உயர்வு உள்ளது.

2 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் இப்படியொரு மக்கள் மீதான தாக்குதல் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானதாகும். முறையாக உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்வு செய்திருந்தால் மத்திய அரசின் நிதி ரூ.3 ஆயிரம் கோடி நிதி பெற்று இருக்க முடியும். இந்த வரி உயர்வை தவிர்த்திருக்க முடியும்.

ஏற்கனவே நகர்புற மக்களிடம் பெற்ற வரிக்கு முறையான சாலை, சாக்கடை, சுகாதார வளாகம், குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகளை மக்களுக்கு முழுமையாக வழங்காத சூழ்நிலையில் வரிகளை உயர்த்தி வசூலிப்பது வழிப்பறி போன்றதாகும். இந்த வரி வசூல் மாற்றியமைப்பு ஆணையை ரத்து செய்வதோடு, முறையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தி மத்திய அரசு நிதியை பெற்று நகர மக்களின் துயர் துடைத்திட வேண்டும். அடிப்படை சேவைகளை பூர்த்தி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே போல் பொதுமக்கள் சார்பிலும் வரி உயர்வை ரத்து செய்ய கோரி மனுக்கள் கொடுக்கப்பட்டன.

Next Story