தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி கரூருக்கு ரதயாத்திரை வருகை பக்தர்களுக்கு காந்திமதி அம்பாள் அருள்பாலித்தார்
தாமிரபரணி புஷ்கர விழாவையொட்டி கரூருக்கு ரதயாத்திரை வந்தது. இதில் சிந்துநதி கலச தீர்தத்துடன் வீற்றிருந்த காந்திமதி அம்பாளை பக்தர்கள் பலர் தரிசனம் செய்தனர்.
கரூர்,
குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயரும் போது, அந்தந்த ராசிக்கு உரிய நதிக்கு புஷ்கர விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு குருபகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து அதற்குரிய தாமிரபரணி ஆற்றுக்கு புஷ்கர விழா நடக்கிறது. நெல்லை மாவட்டத்தில் வற்றாத ஜீவநதியாய் ஓடும் தாமிரபரணிக்கு 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரக்கூடிய மகாபுஷ்கர விழா தற்போது நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாமிபரணி புஷ்கர விழாவை சிறப்பிக்கும் வகையில் விசுவ இந்து பரிசத் சார்பில் 12 ராசிகளுக்கான நதிகளின் ரத யாத்திரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் பாகிஸ்தான்– இந்தியாவின் எல்லை பகுதியில் பாய்ந்தோடும் சிந்து நதி தீர்த்தம் கலசத்தில் கொண்டுவரப்பட்டு பூஜை செய்யப்பட்டது. பின்னர் கோவை மேட்டுப்பாளையத்தில் காந்திமதி அம்பாள் வீற்றிருந்த ரதத்தில் அந்த புனித கலச தீர்த்தம் வைக்கப்பட்டு ஊர்வலமாக வந்தது. பின்னர் கோவை நகரம், பொள்ளாச்சி வழியாக வந்து நேற்று கரூரை அடைந்தது.
அப்போது விசுவ இந்து பரிசத் கரூர் மாவட்ட செயலாளர் செல்ல.பாலு உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் அந்த ரதத்திற்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பின்னர் மேள–தாளங்கள் முழங்க கரூர் பஸ்நிலையம், ஜவகர் பஜார் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அந்த ரதயாத்திரை நடந்தது. அப்போது பக்தர்கள் பலர் கலந்து கொண்டு காந்திமதி அம்பாளுக்கு தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் குளித்தலைக்கு அந்த ரதம் சென்றது. அங்கிருந்து மதுரை வழியாக நெல்லைக்கு சென்று தாமிரபரணியில், அந்த சிந்து நதி தீர்த்தம் கலக்கப்பட்டு மரியாதை செய்யப்படுகிறது. இதற்கிடையே இந்த ரதயாத்திரையின் போது, தாமிரபரணி புஷ்கர விழாவின் சிறப்பம்சங்கள் குறித்தும், அந்த ஆற்றுக்கு நாம் செய்ய வேண்டிய மரியாதைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.