பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபாரிகளை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவு


பத்ரியன் தெருவில் உள்ள மொத்த பூ வியாபாரிகளை 48 மணி நேரத்துக்குள் அப்புறப்படுத்த  ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 9 Oct 2018 10:41 PM GMT (Updated: 9 Oct 2018 10:41 PM GMT)

பத்ரியன் தெருவின் உள்ள மொத்த பூ வியாபாரிகளை 48 மணிநேரத்துக்குள் அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சி மற்றும் போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை பூக்கடை பகுதியில் உள்ள பத்ரியன் தெருவில் மொத்த பூ விற்பனை கடைகள் உள்ளன. சென்னையில் நிலவும் போக்குவரத்து நெரிசல், இடநெரிசல் காரணமாக மொத்த பூ வியாபாரிகளுக்கு, கோயம்பேடு மார்க்கெட்டில் இடமாற்றி, அங்கு கடைகள் ஒதுக்கப்பட்டன.

ஆனால், பத்ரியன் தெருவில் மொத்த பூ வியாபாரத்தை சிலர் தொடர்ந்து நடத்தி வந்தனர். இவர்களது கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தும், அவற்றை உடைத்தெறிந்தும் மீண்டும் கடைகளை நடத்தினர்.

இந்த நிலையில், முருகன் உள்பட 50 மேற்பட்டவர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், தங்களை பூ வியாபாரம் செய்வதற்கு இடையூறு செய்யக்கூடாது என்று அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கடை திறப்பு

இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அனைத்து தரப்பு வக்கீல்களும் ஆஜராகி வாதிட்டார்கள். இதை கேட்டறிந்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மொத்த பூ வியாபாரம் செய்யும் மனுதாரர்கள் உள்ளிட்டோரை, 22 ஆண்டுகளுக்கு முன்பே பத்ரியன் தெருவில் இருந்து வெளியேற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்களை அப்புறப்படுத்த, கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். ஆனால், இந்த கடை உரிமையாளர்கள், சட்டவிரோதமாக ‘சீலை’ உடைத்து, கடையை திறந்து மீண்டும் வியாபாரத்தை தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இந்த செயலை செய்ய வியாபாரிகள் மீது போலீசாரும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நம்பிக்கை இழப்பு

மேலும், இந்த வியாபாரிகளை பத்ரியன் தெருவில் இருந்து வெளியேற்ற ஐகோர்ட்டும் பல உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. சட்டத்தின் அடிப்படையில் அதிகாரிகளும் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இவற்றையெல்லாம் மீறி வியாபாரிகள் தொடர்ந்து அதே இடத்தில் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதை அனுமதித்தால், நீதித்துறை மீதும், நிர்வாகத்துறை மீதும் பொதுமக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும். எனவே, பத்ரியன் தெருவில் இருந்து இந்த வியாபாரிகளை 48 மணி நேரத்துக்குள் மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் அப்புறப்படுத்த வேண்டும். அவர்களது கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும். அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது, அவற்றை வீடியோ கேமராவில் படம் பிடிக்க வேண்டும்.

சட்டப்படி நடவடிக்கை

கடைகளுக்கு வைக்கப்படும் ‘சீலை’ வியாபாரிகள் உடைத்து அப்புறப்படுத்தினால், அவர்கள் மீது போலீசார் சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டும். பத்ரியன் தெருவில் காவல் உதவி மையம் ஒன்றை நிரந்தரமாக அமைத்து, அங்கு மீண்டும் கடை திறக்காதப்படி போலீசார் கண்காணிக்க வேண்டும்.

இந்த ஐகோர்ட்டின் உத்தரவின்படி, அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு, அரசு அதிகாரிகள் அது தொடர்பான அறிக்கையை வருகிற 22-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Next Story