பழுதான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் - அதிகாரிகள் சமரசம்


பழுதான சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் ‘திடீர்’ மறியல் - அதிகாரிகள் சமரசம்
x
தினத்தந்தி 9 Oct 2018 11:11 PM GMT (Updated: 9 Oct 2018 11:11 PM GMT)

பனப்பாக்கம்-தென்மாம்பாக்கம் இடையே பழுதான சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

பனப்பாக்கம்,

பனப்பாக்கம் பேரூராட்சி 1-வது வார்டில் தென்மாம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. காஞ்சீபுரம் செல்லும் வழியில் இது அமைந்துள்ளது. பனப்பாக்கம் பஸ் நிலையத்திலிருந்து இந்த பகுதிக்கு செல்லும் 1 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை குண்டும், குழியுமாக மாறி காணப்படுகிறது. வெயிலடித்தால் புழுதியாகும் இந்த சாலை மழைக்காலங்களில் சகதியாக மாறிவிடுகிறது.

எனவே இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் தரப்பில் பல்வேறு முறை மனு அளிக்கப்பட்டது. நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி சாலை சீரமைப்பு பணி உள்பட முக்கிய பணிகளும் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் சாலை சீரமைக்காததால் கொதிப்படைந்த தென்மாம்பாக்கம் கிராம பொதுமக்கள் நேற்று காலை பனப்பாக்கம்-காஞ்சீபுரம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த நெமிலி தாசில்தார் கந்தீர்பாவை, போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் அலுவலர்கள் மற்றும் போலீசாருடன் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பொதுமக்கள் தரப்பில், “சாலை பழுதாக உள்ளநிலையில் சைக்கிள், மோட்டார்சைக்கிள்களில் செல்பவர்கள் தடுமாறி விழுந்து காயம் அடைகின்றனர். நடந்து செல்வதற்கு கூட பாதை இல்லை. இதனை சீரமைக்க பல முறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த பிரதான சாலையில் உள்ள மின்கம்பங்களில் விளக்குகள் இருந்தும் அவை எரியவில்லை. அனைத்துமே பழுதாகி உள்ளன. இதனால் இரவு நேரங்களில் வழிப்பறி பீதியில்தான் செல்ல வேண்டியுள்ளது. பேரூராட்சிக்கு முறையாக பொதுமக்கள் வரி செலுத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களது கோரிக்கையான சாலைசீரமைப்பை கூட அதிகாரிகள் செய்யாமல் உள்ளனர். எனவே உடனடியாக சாலையை சீரமைப்பதோடு, எரியாத தெருவிளக்குகளை எரிய செய்ய வேண்டும்” என வலியுறுத்தினர்.

இது குறித்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த பேரூராட்சி செயல் அலுவலர் சம்பத்குமாரை தொடர்புகொண்டு தாசில்தார் கந்தீர்பாவை பேசியபோது, “முதல் நடவடிக்கையாக எரியாத தெருவிளக்குகளை எரிய செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

பனப்பாக்கம் திரும்பியதும் பழுதான சாலையை பார்வையிட்டு அதனை சீரமைக்க தேவையான நிதி குறித்து மதிப்பீடு செய்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும்” எனவும் செயல் அலுவலர் தெரிவித்தார். அந்த தகவலை பொதுமக்களிடம் தாசில்தார் தெரிவித்து சமரசப்படுத்தினார்.

அதற்குள் பேரூராட்சி அலுவலர் சம்பத்குமார் உத்தரவின்பேரில் பணியாளர்கள் விரைந்து வந்து மின்கம்பங்களில் உள்ள எரியாத விளக்குகளை எரிய செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியலால் பகல் 11 மணி முதல் 12.15 மணி வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story