ஒவ்வொரு வார்டுகளும் தூய்மையாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும்; ஊராட்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு


ஒவ்வொரு வார்டுகளும் தூய்மையாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும்; ஊராட்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Oct 2018 10:15 PM GMT (Updated: 10 Oct 2018 2:03 PM GMT)

ஊராட்சி அளவிலான அலுவலர்கள் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று தூய்மையாக உள்ளதா என கண்காணிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டார்.

சிவகங்கை,

சிவகங்கையை அடுத்த வாணியங்குடி பகுதியில் கலெக்டர் ஜெயகாந்தன் ஆய்வு நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:–

தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் தங்களது வீடுகள் மற்றும் தெருக்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மழை நீர் மற்றும் கழிவுநீர் வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். கழிவுநீர் தேங்குவதால் அந்த பகுதி முழுவதும் கொசு உற்பத்தியாகி டெங்கு உள்ளிட்ட கொடிய நோய்களை மக்களுக்கு பரப்பும் நிலை உருவாகி விடும். எனவே அதை ஆரம்ப நிலையில் தடுக்கும் பொருட்டு ஒவ்வொரு வீடுகளில் உள்ள பெண்கள் தாங்கள் தினந்தோறும் பயன்படுத்தும் தண்ணீர் குடம் மற்றும் நீர்த்தேக்கும் தொட்டிகளை மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் நீர்தேக்கும் பாத்திரங்களை தினந்தோறும் சுத்தம் செய்து பயன்படுத்துவது அவசியம். வீட்டில் தேவையற்ற பொருட்களை தேக்கி வைக்க கூடாது. மீறி அவைகளை தேக்கி வைப்பதால் அதில் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உருவாகும் நிலை ஏற்படும்.

அதேபோல் குடிநீரை காய்ச்சி பயன்படுத்த வேண்டும். பொதுமக்கள் தங்களுக்கு காய்ச்சல் போன்று அறிகுறி தெரிந்தால் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று அங்குள்ள மருத்துவரின் ஆலோசனையை பெற்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் ஊராட்சி அளவிலான அலுவலர்கள் தினந்தோறும் ஒவ்வொரு வார்டு பகுதிக்கும் நேரடியாக சென்று அங்கு தூய்மையாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கும் குடிநீரில் குளோரினேசன் கலந்து வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டார்.

 மேலும் அந்த பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை வாரம் ஒரு முறை சுத்தம் செய்து அத்துடன் அங்குள்ள விளம்பர பலகையில் சுத்தம் செய்யப்பட்ட தேதி மற்றும் சுத்தம் செய்யப்பட வேண்டிய தேதி ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு எழுதி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மல்குமார், சிவகங்கை தாசில்தார் ராஜா, சுகாதாரத்துறை பூச்சியியல் வல்லுனர் ரமேஷ் உடனிருந்தனர்.


Next Story