இலவச பஸ் பயண அட்டை வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக பணிமனை முற்றுகை : இந்திய மாணவர் சங்கத்தினர் 44 பேர் கைது


இலவச பஸ் பயண அட்டை வழங்கக்கோரி அரசு போக்குவரத்து கழக பணிமனை முற்றுகை : இந்திய மாணவர் சங்கத்தினர் 44 பேர் கைது
x
தினத்தந்தி 10 Oct 2018 9:45 PM GMT (Updated: 10 Oct 2018 5:29 PM GMT)

இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக பணிமனையை முற்றுகையிட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி, 

இந்திய மாணவர் சங்கத்தின் தேனி மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில், மாணவ, மாணவிகள் தேனியை அடுத்துள்ள பழனிசெட்டிபட்டி அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு நேற்று வந்தனர். முன்னதாக அவர்கள், அருகில் உள்ள தனியார் மண்டபம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பணிமனைக்கு வந்தனர்.

பணிமனையில் அவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மாணவர் சங்கத்தினர் கூறுகையில், ‘மாணவ, மாணவிகளுக்கு இன்னும் இலவச பஸ் பயண அட்டை வழங்கப்படவில்லை. அதை வழங்க வேண்டும் என்று பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். தற்காலிக பயண அட்டையாவது வழங்குங்கள் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறோம். அதுவும் கிடைக்கவில்லை. போதிய பஸ் வசதி இல்லாத பகுதிகளுக்கு மாணவர்களின் எண்ணிக்கை அடிப்படையில் பஸ் வசதி செய்ய வேண்டும். டவுண் பஸ்கள் இல்லாத பகுதிகளுக்கு புறநகர் பஸ்களில் மாணவர்கள் இலவசமாக பயணம் செய்வதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படுகிறது’ என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் மாணவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர்.

இதனால், போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையிலான போலீசார், மாணவர் சங்கத்தினரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். 7 மாணவிகள் உள்பட மொத்தம் 44 பேர் கைது செய்யப்பட்டு அப்பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story