தந்தையை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை ; திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு


தந்தையை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை ; திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Oct 2018 3:15 AM IST (Updated: 10 Oct 2018 11:26 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை அருகே தந்தையை கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

திருவண்ணாமலை, 

திருவண்ணாமலையை அடுத்த வெறையூர் அழகானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி அசோதை. இவர்களின் மகன் சக்ரவர்த்தி (வயது 40), தொழிலாளி. இவருக்கு கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு கீதா (35) என்ற பெண்ணுடன் திருமணம் ஆனது. திருமணம் ஆன சில ஆண்டுகளிலேயே கணவன் - மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.

இந்த நிலையில் கீதா, சக்ரவர்த்தியுடன் வாழ பிடிக்காமல் தனது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதையடுத்து சக்ரவர்த்தி தனியாக வாழ்ந்து வந்துள்ளார். சக்ரவர்த்தி தனது தாய், தந்தையிடம் தனது மனைவியை சமரசம் செய்து தன்னுடன் வாழ வைக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 11.9.2015 அன்று வேலு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது சக்ரவர்த்தி தந்தையின் கழுத்தை நெரித்து, கட்டையால் தாக்கி கொலை செய்தார்.

இந்த சம்பவம் குறித்து வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுதொடர்பான வழக்கு திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் நேற்று நீதிபதி மகிழேந்தி தீர்ப்பு கூறினார். அதில், சக்ரவர்த்திக்கு ஆயுள் தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்தார். அபராத தொகையை கட்ட தவறினால் கூடுதலாக 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதையடுத்து போலீசார், சக்ரவர்த்தியை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story