அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு ‘சீல்’ ; நீதிபதி உத்தரவின்பேரில் கல்வி அதிகாரி நடவடிக்கை
திருவண்ணாமலை அருகே அடிப்படை வசதிகள் இன்றி செயல்பட்ட தனியார் பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த மங்கலம் காந்தி நகரில் தனியார் மெட்ரிக்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கீழ்பென்னாத்தூர் சோ.நம்மியந்தல் கிராமத்தை சேர்ந்த லக்ஷியா (வயது 4) என்ற சிறுமி எல்.கே.ஜி. படித்து வந்தாள். இவள் கடந்த மாதம் 24-ந் தேதி பள்ளி பஸ்சில் சென்றபோது, அவசர கதவு திடீரென திறந்ததால் ஓடும் பஸ்சில் இருந்து நடுரோட்டில் கீழே விழுந்தாள்.
இதில் மாணவி படுகாயம் அடைந்தாள். இதையடுத்து அந்த பள்ளியில் மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி, சார்பு நீதிபதி ராஜ்மோகன் ஆகியோர் திடீரென ஆய்வு செய்தனர். அப்போது பள்ளி பாதுகாப்பற்றும், கழிவறை வசதி இல்லாமல் சுகாதாரமின்றி அடிப்படை வசதிகள் இன்றியும் காணப்பட்டது.
இந்த நிலையில் பள்ளிக்கு சீல் வைக்க மாவட்ட நீதிபதி மகிழேந்தி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், திருவண்ணாமலை கல்வி அலுவலர் அருட்செல்வன் ஆகியோர் சென்று பள்ளிக்கு சீல் வைத்தனர்.
மேலும் இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, அனைத்து தனியார் பள்ளிகளுக்கும், இந்த மாணவர்களை எந்தவித நிபந்தனை இன்றி சேர்த்து கொள்ள வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story