மாவட்ட செய்திகள்

புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு + "||" + New findings will encourage the growth of the country

புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு

புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் - துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேச்சு
புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.

பொள்ளாச்சி,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் வைரவிழா நிறைவு கொண்டாட்டம் கல்லூரி வளாகத்தில் உள்ள நாச்சிமுத்து கவுண்டர் நூற்றாண்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கோவை பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை தாங்கினார். அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலை வகித்தார். முன்னதாக என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கம் வரவேற்று பேசினார். வைர விழா ஆண்டறிக்கையை தாளாளர் ஹரிகரசுதன் வாசித்தார்.

விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு அருட்செல்வர் உயர் தொழில்நுட்பம் மையம், மிராக்கில் வெல்லென்ஸ் கிளினிக் ஆகியவற்றை திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து ‘எனது சிந்தனையில் அருட்செல்வர்’ என்ற புத்தகத்தை அவர் வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு கிராமப்புற மேம்பாடு மிகவும் முக்கியமானது. கிராமப்புற மக்களுக்கு இடஒதுக்கீட்டையும், வசதி வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். பசுமை புரட்சிக்கு வித்திட்ட நம் தேசத்தின் வல்லுனர்களையும், அவர்களுடன் தோள்கொடுத்த விவசாய மக்களையும் எண்ணி பார்க்க வேண்டும். இந்திய நாட்டின் உணவு தேவை அபரிமிதமானது. அதனை நமது கிராமங்களே பூர்த்தி செய்கின்றன. ஊட்டச்சத்து குறைபாடுகளை களைய சிறு தானிய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். உணவு முறைகளில்தான் நம் கலாசாரம் அடங்கி உள்ளது.

விவசாய தொழிலை நாம் முன்னெடுக்காவிட்டால் தேசத்தின் முன்னேற்றத்துக்கு சாத்தியமில்லை. இளைஞர்களை சரியான பாதையில் கொண்டு செல்லவே அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா, திறன் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி போன்ற பல திட்டங்கள் இவர்களை மனதில் கொண்டே முன்னெடுக்கப்பட்டு உள்ளது.

நகரங்கள் ஸ்மார்ட் ஆக இருக்க முதலில் அங்குள்ள மக்களின் மனம் ஸ்மார்ட் ஆக இருக்க வேண்டும். ஊழலும், சுரண்டலும் மக்களின் மனங்களில் இருந்து வெளியேற வேண்டும். இந்தியாவில் அபரிமிதமான ஆற்றல் நிறைந்துள்ளது. ஆனால் பயிற்சி பெற்ற திறனாளர்கள் மிக குறைந்த அளவில், அதாவது 4.69 சதவீதம் மட்டுமே உள்ளனர். இதுவே தென்கொரியாவில் 90 சதவீதம் பயிற்சி பெற்ற திறனாளர்கள் உள்ளனர். இதுவே அவர்கள் எலெக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பல துறைகளில் முன்னிலையில் இருக்க காரணம்.

நம் பாடத்திட்டங்களிலும் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். தொடர்ச்சியான கற்றலின் மூலமே இதை சாத்தியப்படுத்த முடியும். புதிய கண்டுபிடிப்புகள் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். தாய்மொழியில் பேசவும், உரையாடவும் செய்யுங்கள். இந்த மண்ணில் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ.சி., பாரதியார், வாஞ்சிநாதன், காமராஜர், முத்துராமலிங்க தேவரும் மிக சிறந்த ஆளுமைக்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்தவர்கள். இவர்களின் வாழ்க்கை முறைகளை தெரிந்து கொண்டாலே, நாம் மேலை கலாசாரத்தை பார்க்க வேண்டிய அவசியம் வராது. தன் தொழிலில் நேர்மையும், திறமையும் கொண்ட ரஜினிகாந்த் போன்றவர்கள் அடைந்துள்ள வெற்றி, உழைக்கும் ஒவ்வொருவரின் வெற்றி.

தாய் மொழி கல்வியே சிறந்தது. தாய் மொழி என்பது நம் கண்களின் பார்வை போன்றது. பிற மொழிகள் நாம் அணியும் கண்ணாடி போன்றது. கண் பார்வை நன்றாக இருந்தால் தான் கண்ணாடியின் பயன் நமக்கு தெரியும். ஆடம்பர வாழ்வை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள். யோகா என்பது மோடிக்கு மட்டுமல்ல நம் உடலுக்கும் முக்கியமானது.

அறிவியலும், தொழில்நுட்பமும் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக அமைய வேண்டும். மகளிர் முன்னேற்றம் என்பது ஒவ்வொரு சமூகத்துக்கும் இன்றியமையாதது. ஆணும், பெண்ணும் சமமான ஒரு சூழலில் இருந்தால் தான் சமூக முன்னேற்றம் ஏற்படும். அறிவை ஆக்கத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் மாணவர்களின் கல்வி உதவித்தொகைக்காக ரூ.2 கோடிக்கான காசோலையை, முன்னாள் மாணவர்கள் மன்றத்தினர் சார்பில் அதன் மதிப்பியல் தலைவர் கே.பாலசுப்பிரமணியம், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் தலைவர் மாணிக்கத்திடம் வழங்கினார். முன்னாள் மாணவர்களின் நிறுவனங்களில் தயாரிக்கும் பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதில், மத்திய கயிறு வாரிய தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் துணை தலைவர் எம்.பாலசுப்பிரமணியம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலாளர் சி.ராமசாமி நன்றி கூறினார்.

முன்னதாக கோவையில் இருந்து விமான படைக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் பொள்ளாச்சிக்கு 9.40 மணிக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வந்தார். பின்னர் பொள்ளாச்சியில் நிகழ்ச்சியை முடித்து விட்டு 11.30 மணிக்கு ஹெலிகாப்ட்டரில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திண்டுக்கல்லுக்கு புறப்பட்டு சென்றார். துணை ஜனாதிபதி வருகையையொட்டி கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா தலைமையில் டி.ஐ.ஜி. கார்த்திகேயன் உள்பட 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.