ஊட்டி கீழ்கோடப்பமந்து பகுதியில் நடைபாதையில் மண் சரிவு; பொதுமக்கள் அவதி
ஊட்டி கீழ்கோடப்பமந்து பகுதியில் நடைபாதையில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் காந்தல், கோடப்பமந்து, பிங்கர்போஸ்ட், ஹில்பங்க் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான கேத்தி, நஞ்சநாடு, முத்தோரை உள்ளிட்ட கிராமங்களில் மழை பெய்தது. ஊட்டி நகரின் பிரதான கால்வாயான கோடப்பமந்து கால்வாயில் விவசாய நிலங்களில் இருந்து மணல் அடித்து வரப்படுகிறது. இதனால் கால்வாயில் மணல் படிந்து காணப்படுவதால், தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
தொடர் மழையால் குடியிருப்பு பகுதிகளில் லேசான மண் சரிவு மற்றும் வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டன. அதன் காரணமாக பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதற்கிடையே மழை பெய்வது நின்று வெயில் அடிக்க ஆரம்பித்தது. இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஊட்டி நகராட்சி 6–வது வார்டுக்கு உட்பட்ட கீழ்கோடப்பமந்து பகுதியில் விவசாய நிலத்தில் மண் சரிவு ஏற்பட்டு நடைபாதையை மூடியது. இதனால் பொதுமக்கள் கீழ் இருந்து மேல் பகுதிக்கும், மேல் பகுதியில் இருந்து கீழ் பகுதிக்கும் செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:-
ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 6–வது வார்டான கீழ்கோடப்பமந்து பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்கள் நடந்து செல்வதற்கு நகராட்சி மூலம் நடைபாதை அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளது. மழை பெய்யும் நேரங்களில் எல்லாம் விவசாய நிலத்தில் இருந்து மண் சரிந்து நடைபாதையில் விழுந்து வருகிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களே சில சமயங்களில் நடைபாதையில் குவிந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்தி நடந்து செல்வதற்கு வழி ஏற்படுத்தினார்கள். கட்டுமான பொருட்களை மேலே கொண்டு செல்வதற்கு சிரமம் ஏற்படுகிறது.
தற்போது இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த நடைபாதையில் இரண்டு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு உள்ளது. நடைபாதையை மண் மூடி உள்ளதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ–மாணவிகள், அலுவலக வேலைக்கு செல்கிறவர்கள் உள்ளிட்டோர் நடந்து செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் அந்த மண் சேறாக இருப்பதால் வழுக்கி கீழே விழும் அபாயம் உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்கிறவர்கள் அச்சத்துடனேயே சென்று வருகிறார்கள். மண் சரிவு ஏற்படும் போது நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்கள் மீது மண் விழுந்தால் பெரும் விபத்து நிகழக்கூடும். எனவே, நடைபாதையில் விழுந்து கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.