3 தொழிலாளர்களை கொன்ற வழக்கில் முக்கிய குற்றவாளி கைது: மும்பையில் பதுங்கி இருந்தபோது சிக்கினார்
திண்டுக்கல்லில், 3 தொழிலாளர்கள் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி மும்பையில் கைது செய்யப்பட்டார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் சோலைஹால் பகுதியை சேர்ந்த குருசாமி மகன்கள் மதுரைவீரன், சரவணன். அதே பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (45). இவர்கள் 3 பேரும் திண்டுக்கல் மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துப்புரவு பணியில் ஈடுபட்ட 3 பேரும், ஒரு கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் நகரில் வெவ்வேறு இடங்களில் பணியில் ஈடுபட்ட 3 பேரும் சுமார் 30 நிமிடங்களில் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சோமசுந்தரம் என்பவரின் கொலைக்கு பழிவாங்கும் வகையில் 3 பேரும் கொல்லப்பட்டது தெரியவந்தது.
இந்த கொலைகள் தொடர்பாக, திண்டுக்கல் என்.எஸ்.கே.நகரை சேர்ந்த வேளாங்கண்ணி (38), வினோத்ராஜ் (24), பாறைமேட்டுத்தெருவை சேர்ந்த ராமநாதன் (23), கார்த்திக் (24), ராமர் (24), சகாயம் (25), பேகம்பூரை சேர்ந்த சர்தார் (24), பிஸ்மிநகரை சேர்ந்த ரபீக் (22) உள்பட 12 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். முக்கிய குற்றவாளியான தினேஷ் (38) மட்டும் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவானார். அவரை கடந்த 11 மாதங்களாக போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.
இதேபோல, கோவையில் நடந்த 3 பேர் கொலை வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல ரவுடியான மோகன்ராமை கோவை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில், இரண்டு பேரும் மும்பையில் ஒரே இடத்தில் பதுங்கி இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை தனிப்பிரிவு (திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவு) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், போலீசார் மும்பைக்கு விரைந்து சென்று இரண்டு பேரையும் மடக்கி பிடித்தனர்.
பின்னர், 2 பேரையும் தமிழகத்துக்கு அழைத்து வந்த தனிப்பிரிவினர், மோகன்ராமை கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதேபோல, தினேஷ் நேற்று திண்டுக்கல் வடக்கு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இதையடுத்து, தினேசை திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story