தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உள்பட 9 பேர் படுகாயம்


தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உள்பட 9 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 11 Oct 2018 3:00 AM IST (Updated: 11 Oct 2018 1:17 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் தெருநாய்கள் கடித்து குதறியதில் சிறுமி உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

பழனி, 


பழனி, பாலசமுத்திரம் பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருநாய்களை கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், தெருநாய்களை கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தெருநாய்கள் கடித்து அரசு மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தெருநாய்கள் கடித்து குதறியதில், பழனியை சேர்ந்த பெண் சிகிச்சை பலனின்றி இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பழனி மற்றும் பாலசமுத்திரம் பகுதியில் சாலையில் நடந்து சென்றவர்களை தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடித்து குதறின.

இதில் பாலசமுத்திரத்தை சேர்ந்த உதயகுமார் (வயது 27), பழனி இந்திராநகரை சேர்ந்த பிரசாந்த் (20), காமராஜர்நகரை சேர்ந்த மகாமுனி (60), மாயவன் (40), இட்டேரிசாலையை சேர்ந்த ஹசீப் (27), பெருமாள் மகன் பூமிநாதன் (25), அழகாபுரியை சேர்ந்த முனீஸ்வரன் (17), மரிச்சிலம்பை சேர்ந்த சத்யபிரியா (6), மதனபுரத்தை சேர்ந்த அங்குராஜ் (30) ஆகிய 9 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் அனைவரும் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதுபற்றி பழனி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் விஜயசேகர் கூறுகையில், பழனி அரசு மருத்துவமனைக்கு தினமும் 10 பேர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற வருகின்றனர். அதேபோல் தொடர் சிகிச்சைக்காக 25 பேர் வரை வந்து செல்கின்றனர். நாய் கடியின் காயம் ஆழமாக இருந்தால் ‘ரேபிஸ் வைரஸ்’ பரவும் வாய்ப்பு அதிகம் இருக்கும். எனவே, தனிக்கவனம் செலுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்றார்.

Next Story