சிங்கம்புணரி பகுதியில் பெரியாறு பாசன விரிவாக்க பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை


சிங்கம்புணரி பகுதியில் பெரியாறு பாசன விரிவாக்க பகுதிக்கு தண்ணீர் திறக்க வேண்டும், விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 10 Oct 2018 10:00 PM GMT (Updated: 10 Oct 2018 8:17 PM GMT)

சிங்கம்புணரி பகுதியில் உள்ள பெரியாறு பாசன விரிவாக்க பகுதிக்கு உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி பகுதியில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் முதல் விரிவாக்கப் பகுதியாக உள்ள இப்பகுதி தற்போது வறட்சியான பகுதியாக காணப்பட்டு வருகிறது. மேலும் மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் புளிப்பட்டியில் இருந்து பிரிந்து வரும் பெரியாறு பாசன நீர் மதுரை மாவட்டம் சுக்காம்பட்டி, செருதப்பட்டி, வேட்டையன்பட்டி போன்ற பகுதிகளில் பிரிந்து சிங்கம்புணரி மற்றும் அதை சுற்றியுள்ள காளாப்பூர் போன்ற பகுதிகளுக்கு குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு பயன்பெறும் வகையில் இந்த பெரியாறு பாசன கால்வாயில் காளாப்பூர், சூரக்குடி, முத்துச்சாமிப்பட்டி வழியாக செல்கிறது.

இந்த வழியாக பெரியாறு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி பல ஆண்டுகளாக இப்பகுதி விவசாயிகள் தரப்பில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்து சிங்கம்புணரி அருகே உள்ள காளாப்பூர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுடர் தேவன் கூறியதாவது:– பெரியாறு கால்வாய் முதல் விரிவாக்கப் பகுதி வரை உள்ள இந்த பகுதி மிகவும் வறட்சியான பகுதி. மேலும் இந்த பகுதியில் போதுமான பருவ மழை பெய்யாததால் விவசாயம் இல்லாமல் மக்களின் அன்றாட குடிநீர் தேவைக்கும் கூட மிகவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது.

இது தவிர போதிய தண்ணீர் இல்லாததால் கிராமப்புறத்தில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் வளர்த்து வரும் ஆடு மாடுகளுக்கு கூட தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர். தற்போது பெரியாறு அணையின் முழு கொள்ளளவு தண்ணீர் இருப்பதன் காரணமாக பெரியாறு பாசன பகுதிகளுக்கு கடந்த ஆகஸ்டு மாதமே தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால் முன்னுரிமை அடிப்படையில் முதல் விரிவாக்க கால்வாயான சிங்கம்புணரி பகுதி கால்வாய்க்கு தொடர்ந்து தண்ணீர் தராமல் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இதே பெரியாறு கால்வாயில் கடந்த மாதம் குடிநீர் தேவைக்காக வைகை ஆயக்கட்டு கண்மாய்களுக்கு மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது வரை பெரியாறு நீர் இருப்பு 8 ஆயிரத்து 500 கன அடிக்கு மேல் உள்ளது. மேலும் பெரியாறு நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அந்த பகுதியில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

ஆனால் சிங்கம்புணரி பகுதிக்கு இன்று வரை தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளதால் இந்த பகுதியில் விவசாயம் இல்லாமல் குடிநீர் தேவைக்கு கூட தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், பெரியாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளர் ஆகியோர்களுக்கு சிங்கம்புணரி, காளாப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏற்கனவே கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story