நவராத்திரி விழா தொடங்கியது கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நவராத்திரி விழா தொடங்கியது கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 8:31 PM GMT)

நவராத்திரி விழா தொடங்கியதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருச்சி,

அன்னை பராசக்தி அருள் வேண்டி செய்யும் பூஜையே நவராத்திரி ஆகும். துர்கா, மகாலட்சுமி, சரஸ்வதி என மூன்று வடிவங்களில் அம்பிகை வழிபாடு உள்ளது. சர்வ சத்ரு உபாதைகளில் இருந்து நீங்கவும், தோஷம் நீங்கி தைரியத்தை கொடுக்கும் துர்காதேவியையும், குபேரன் அருள் வியாபாரம் பெருக, செல்வ செழிப்பில் திளைக்க மகாலட்சுமியையும், இயல், இசை, நாடகம், கல்வி ஆகியவற்றில் சிறக்க 64 கலைகளையும் கற்றுக்கொள்ள சரஸ்வதிதேவியையும் என முப்பெரும் தேவிகளையும் நவராத்திரி விழாவில் வழிபாடு நடத்துவது உண்டு.

நவராத்திரி விழாவையொட்டி 9 நாட்களும் பக்தர்கள் விரதம் இருந்து பூஜை செய்வார்கள். நவராத்திரியின் சிறப்பம்சமே வீடு மற்றும் கோவில்களில் கொலு அமைப்பதே ஆகும். கொலுவில் 9 படிகள் அமைக்கப்பட்டிருக்கும். அனைத்து பொருட்களிலும் அம்பிகையை காண வேண்டும் என்பதே கொலு மேடை படிகளின் தத்துவம் ஆகும்.

கொலு மேடையில் ஒவ்வொரு படிகளுக்கும் தனி தத்துவம் உண்டு. ஒவ்வொரு படியிலும் வெவ்வேறு வகையான பொருட்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மைகள் இடம்பெற்றிருக்கும். இதேபோல கோவில்களிலும் கொலு மேடை அமைக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி திருச்சியில் பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் ஸ்ரீரெங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று பகல் 1.15 மணி முதல் மாலை 3.30 மணி வரை மூலஸ்தானத்தில் ஸ்ரீரெங்கநாச்சியார் திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் மாலை 6.30 மணிக்கு மூலஸ்தானத்திலிருந்து ஸ்ரீரெங்கநாச்சியார்் புறப்பட்டு இரவு 7 மணிக்கு கொலுமண்டபம் வந்தடைந்தார். இரவு 9.45 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 10 மணிக்கு ஸ்ரீரெங்கநாச்சியார் மூலஸ்தானம் சென்றடைந்தார்.

விழாவையொட்டி ஆரியபட்டாள் வாசல் அருகே நூறுகால் மண்டபத்தில் நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. இதில் அமைக்கப்பட்டிருந்த சாமி பொம்மைகளை பக்தர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7-ம் திருநாளான 16-ந் தேதி அன்று ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும் தாயார் திருவடி சேவை நடைபெறுகிறது. விழாவின் 9-ம் நாளான 18-ந்தேதி சரஸ்வதி பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர் ஜெயராமன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் தாயார் மூலஸ்தானத்தில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு நவராத்திரி கொலு மண்டபம் வந்தடைந்தார். மண்டபத்தில் தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி வருகிற 14-ந்தேதி திருவடி சேவை நடைபெற உள்ளது. இதேபோல சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா தொடங்கியது. இரவு 7.30 மணிக்கு மேல் உற்சவ மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து மரக்கேடயத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் உள்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் வழிபட்டனர். தொடர்ந்து வருகிற 19-ந்தேதி வரை அம்மன் வெவ்வேறு அலங்காரத்தில் அருள்பாலிக்கிறார். 18-ந்தேதி சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் காட்சியளிப்பார். விழாவையொட்டி தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் பரதநாட்டியம், ஆன்மிக சொற்பொழிவு கோவிலில் நடந்து வருகிறது. வருகிற 19-ந்தேதி இரவு 7.30 மணிக்கு அம்மன் புறப்பாடாகி வன்னிமரம் அடைந்து அங்கு அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் மேலாளர் ஹரிஹரசுப்பிரமணியன், மணியக்காரர் ரமணி மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் செய்து உள்ளனர்்.

மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவிலில் மட்டுவார் குழலம்மை ஏகாந்த சேவையில் கொலு மண்டபத்தில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி மாணிக்க விநாயகர் சன்னதி அருகே நவராத்திரி கொலு அமைக்கப்பட்டுள்ளது. விழா வருகிற 19-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதேபோல திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு அமைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் தொடங்கியது. இதையடுத்து அம்மன் ஏகாந்த அலங்காரத் தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தென்னூர் பட்டாபிராமன் தெருவில் சீனிவாச பெருமாள் கோவிலில் பெருமாள் அனந்தசயன அலங்காரத்தில் காட்சியளித்தார். விழாவில் சிறுவர், சிறுமிகள் பக்தி பாடல்களை பாடினர். இதேபோல வீடுகளில் பக்தர்கள் கொலு அமைத்து நேற்று முதல் வழிபாடு தொடங்கினர்.

Next Story