ஜிப்மர் பட்டமளிப்பு விழா: துணை ஜனாதிபதி நாளை புதுவை வருகை
ஜிப்மர் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி நாளை புதுவை வருகிறார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புதுச்சேரி,
புதுச்சேரி கோரிமேடு ஜிப்மர் மருத்துவக்கல்லூரி பட்டமளிப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இந்த விழாவில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு பட்டங்களை வழங்க உள்ளார். இதற்காக அவர் சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நாளை காலை புதுவை விமான நிலையம் வருகிறார்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஜிப்மர் வளாகத்திற்கு செல்கிறார். துணை ஜனாதிபதி வருகையை முன்னிட்டு புதுவை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மாநில எல்லையில் போலீசார் சிறப்பு சோதனைச்சாவடிகள் அமைத்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
விழா நடைபெறும் ஜிப்மர் ஆடிட்டோரியம் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த பகுதியில் 95 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஜிப்மர் வளாகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது வந்தால் அவர்களை பிடித்து கோரிமேடு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணைக்கு பிறகே அனுப்புகின்றனர்.
ஜிப்மர் புதிய விருந்தினர் மாளிகையில் உள்ள அறைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டு வெளி நபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பாதுகாப்பு கருதி ராஜீவ்காந்தி சிலை சதுக்கத்தில் இருந்து கோரிமேடு செல்லும் வழியில் உள்ள வேகத்தடைகள் அகற்றப்பட்டுள்ளன.
வெங்கையாநாயுடு வருகையையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமை தாங்கினார். கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டுகள் கலந்து கொண்டனர். இதில் துணை ஜனாதிபதி வருகையின் போது மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோகிக்கப்பட்டது. மேலும் நள்ளிரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவது, பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கடலோர காவல்படையினரும் கடலோர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.