தூத்துக்குடி அருகே: பஸ்-மோட்டார் சைக்கிள் மோதல்; 2 பக்தர்கள் பலி, கோவிலுக்கு சென்று திரும்பியபோது பரிதாபம்
தூத்துக்குடி அருகே பஸ்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பக்தர்கள் பலியாகினர். குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்று விட்டு, மோட்டார் சைக்கிளில் திரும்பியபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
விளாத்திகுளம்,
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வைப்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசாமி மகன் வீரமுருகன் (வயது 35). இவர் அங்குள்ள உப்பளத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே பகுதியில் வசித்தவர் முத்தையா மகன் முருகன் (45). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
நண்பர்களான இவர்கள் குலசேகரன்பட்டினம் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக விரதம் இருந்து வந்தனர். நேற்று காலையில் வைப்பார் கிராமத்தில் இருந்து சிலர் வேனில் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த 2 பேரும் தூத்துக்குடி வரையிலும் மோட்டார் சைக்கிளில் சென்றனர். பின்னர் அவர்கள், அங்கிருந்து தங்களது ஊரில் இருந்து வந்த வேனில் ஏறி, குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு சென்றனர்.
குலசேகரன்பட்டினம் கோவிலில் வீரமுருகன், முருகன் உள்ளிட்ட அனைவரும் காப்பு அணிந்த பின்னர், மாலையில் தங்களது ஊருக்கு வேனில் புறப்பட்டனர். இந்த 2 பேர் தூத்துக்குடி வரையிலும் வேனில் வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் தூத்துக்குடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வைப்பாருக்கு புறப்பட்டு சென்றனர்.
தூத்துக்குடி அருகே வேப்பலோடை விலக்கு கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, எதிரே வந்த பஸ் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும், தருவைக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செல்வகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து நிகழ்ந்ததும் பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்தில் இறந்த வீரமுருகனுக்கு சின்னம்மாள் என்ற மனைவியும், அருள்பாண்டி, மதிபிரகாஷ், அபினேஷ் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். விபத்தில் இறந்த முருகனுக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். முருகனுக்கு சொந்த ஊர் தூத்துக்குடி அருகே தெற்கு சிலுக்கன்பட்டி ஆகும். இவர் வைப்பாரில் உள்ள தன்னுடைய மகள் முத்துசெல்வியின் வீட்டில் தங்கியிருந்து, கட்டிட வேலைக்கு சென்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு சிலர் பஸ்சில் சுற்றுலா சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
Related Tags :
Next Story