கிராம ஊராட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
கிராம ஊராட்சிகளுக்கு உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய கோரி ஊரகவளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் தர்மபுரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி,
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் தர்மபுரி மாவட்ட பிரிவு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாநில செயற்குழு உறுப்பினர் விமலன் தலைமை தாங்கினார். மாவட்டசெயலாளர் இளங்குமரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
தமிழ்நாடுஅரசு ஊழியர் சங்க மாவட்டதலைவர் சுருளிநாதன், மாவட்ட செயலாளர் சேகர், தமிழ்நாடு மோட்டார் வாகன பாராமரிப்பு நிறுவன தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் புகழேந்தி, தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சு பணியாளர் சங்க மாநில துணைதலைவர் யோகராசு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் காவேரி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த திட்டபணிகளை நிறைவேற்ற அலுவலர்களுக்கு உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஊரக வளர்ச்சி துறை சார்ந்த பணிகளை பிறதுறைகளை சேர்ந்த அலுவலர்களை கொண்டு கள ஆய்வுக்கு உட்படுத்துவதை கைவிடவேண்டும். அரசு விடுமுறை தினங்களில் கள ஆய்வு மற்றும் ஆய்வுகூட்டங்கள் நடத்துவதை கைவிட வேண்டும். கோவை, திருச்சி மாவட்டங்களில் நூறு நாள் வேலை உறுதி திட்ட செயல்பாடுகளில் அந்த மாவட்ட ஊழியர்கள் மீது தொடரப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடவேண்டும்.
கிராம ஊராட்சிகளுக்கு தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மகளிர் திட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் நீக்கப்பட்ட 31 ஊரக வளர்ச்சி துறை உதவித்திட்ட அலுவலர் பணியிடங்களை மீண்டும் வழங்க வேண்டும். வட்டார மேலாளர் பணியிடங்களை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலை பணியிடமாக மாற்றி ஊரகவளர்ச்சித்துறை அலுவலர்கள் மூலமாக நிரப்ப வேண்டும்.
என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.