சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் - நாளை முதல் 3 நாட்கள் நடக்கிறது
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் நாளை முதல் 3 நாட்கள் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து பேசுகிறார்.
சேலம்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், “மக்களுடனான பயணம்“ என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களை நேரில் சந்தித்து உரையாற்றி வருகிறார். கன்னியாகுமாரி, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்துகளை கேட்டறிந்தார். மேலும், கல்லூரி மாணவ-மாணவிகள், விவசாயிகள், நெசவாளர்களுடன் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்கள் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் கமல்ஹாசன் சேலம் வருகிறார். சேலம் விமான நிலையத்தில் அவருக்கு கட்சி நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து சேலம் விமானம் நிலையத்தில் இருந்து கார் மூலம் குமாரபாளையத்திற்கு செல்லும் கமல்ஹாசன், அங்குள்ள எஸ்.எஸ்.எம்.கல்லூரியில் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடுகிறார்.
பின்னர் அவர், மல்லசமுத்திரம், மகுடஞ்சாவடி வழியாக இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் உள்ள நெசவாளர்களை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து பேசுகிறார். இதையடுத்து இரவில் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குகிறார். நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், கெங்கவல்லி, அயோத்தியாபட்டணம் பகுதிகளுக்கு செல்லும் கமல்ஹாசன், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடுகிறார். பிறகு சேலம் பள்ளப்பட்டியில் காரில் இருந்தவாறு பேசும் கமல்ஹாசன், அதைத்தொடர்ந்து சேலம் கோட்டை மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகளை மக்கள் நீதி மய்யம் கட்சியின் சேலம் மாவட்ட பொறுப்பாளர்கள் நடராஜன் (மத்திய), பிரசன்ன சித்தார்த்தன் (மேற்கு), கோபால் (கிழக்கு), பிரபு மணிகண்டன் (தெற்கு) ஆகியோர் செய்துள்ளனர்.
14-ந் தேதி நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம், புதுச்சத்திரம், நாமக்கல், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், குமாரபாளையம் ஆகிய பகுதிகளில் பொதுமக்களை சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடுகிறார்.
Related Tags :
Next Story