புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயம் பறிமுதல்; வாலிபர் கைது
புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மோட்டார் சைக்கிளில் கடத்தி வந்த 150 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து அதனை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரை துரத்தி சென்று பிடித்த போலீசாருக்கு போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் ஏட்டு சுந்தரபாண்டியன், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் நேற்று முன்தினம் இரவு கம்மியம்பேட்டை பாலம் அருகில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 4 சாக்கு மூட்டைகளுடன் வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை போலீசார் வழிமறித்த போது, அவர் நிற்காமல் வேகமாக சென்றார்.
உடன் அவரை போலீஸ் ஏட்டு சுந்தரபாண்டியன், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் துரத்தி சென்று, இம்பீரியல் சாலையில் உள்ள மோகினி பாலம் அருகில் சுற்றி வளைத்து பிடித்தனர்.
விசாரணையில் அவர் புதுச்சேரி பாகூர் மாதாகோவில் தெருவை சேர்ந்த கோவிந்தன் மகன் பாலாஜி (வயது 21) என்பது தெரிந்தது. மேலும் அவர் புதுச்சேரியில் இருந்து கடலூர் வழியாக ஆலப்பாக்கத்துக்கு 4 சாக்கு மூட்டைகளில் 150 லிட்டர் சாராயத்தை கடத்தி செல்ல முற்பட்ட போது போலீசில் சிக்கியதும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் பாலாஜியை பிடித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து 150 லிட்டர் சாராயம் மற்றும் மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது பற்றி சம்பவம் அறிந்ததும் ஏட்டு சுந்தரபாண்டியன், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் தன்னுடைய அலுவலகத்துக்கு வரவழைத்து போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பாராட்டினார். மேலும் சாராயம் கடத்தலுக்கு உடந்தையாக போலீசார் இருந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சோதனைச்சாவடிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்றும் போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மைக் மூலம் அனைத்து போலீசாருக்கும் எச்சரிக்கை செய்தார்.
Related Tags :
Next Story