வேலூர் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் சுயநினைவை இழந்த பள்ளி மாணவிக்கு சிகிச்சை
காய்ச்சலால் சுய நினைவை இழந்த பள்ளி மாணவிக்கு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். தற்போது மாணவி நலமுடன் உள்ளார்.
அடுக்கம்பாறை,
நெமிலி தாலுகா பழைய மோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி வள்ளி. அவர்களின் மகள் யோகா (வயது 11). இவர், பாணாவரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சலால் அவதிப்பட்ட யோகா, பாணாவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவர், 3-ந்தேதி திடீரென சுய நினைவை இழந்தார். அவரை மேல்சிகிச்சைக்காக பெற்றோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் தலைமையிலான மருத்துவக்குழுவினர் தீவிர பரிசோதனை செய்தனர். அதில் அவருக்கு, ’அக்யூட் ரூமாடிக் காய்ச்சல்’ மற்றும் ‘கார்டியோஜெனிக் அதிர்ச்சி’ ஆகிய பாதிப்புகளால் யோகாவின் இதயம் வீக்கம் அடைந்தும், இதனால் காய்ச்சல் ஏற்பட்டும் சுய நினைவை இழந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் மூலம் உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்டிலேட்டரில் வைத்து ‘மில்ரி நோன்‘ என்ற ஆன்டி பயாடிக் மருந்து அளிக்கப்பட்டது. அதன் பின்னரே அவர் காய்ச்சலில் இருந்து குணமடைந்து நலமாக உள்ளார்.
இதற்கிடையே, யோகாவுக்கு மேற்கொண்ட மருத்துவப் பரிசோதனையில் இதயத்தில் அவருக்கு பிரச்சினை இருப்பதும் தெரிய வந்துள்ளது. விரைவில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதாகவும், சுயநினைவை இழந்ததை குணப்படுத்த மேற்கொண்ட சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் குறைந்த பட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவாகி இருக்கும். ஆனால், அரசு மருத்துவமனையில் முற்றிலும் இலவசமாக முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்தில் அவருக்கு மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குழந்தைகள் நலத்துறை தலைவர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story