கோயம்பேடு பஸ் நிலையம் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை


கோயம்பேடு பஸ் நிலையம் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
x
தினத்தந்தி 11 Oct 2018 4:20 AM IST (Updated: 11 Oct 2018 4:20 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே கல்லால் தாக்கி தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பூந்தமல்லி, 

கோயம்பேடு பஸ் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் பிணமாக கிடப்பதாக கோயம்பேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ராஜகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று இறந்து கிடந்த நபரின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

கல்லால் தாக்கி கொலை

விசாரணையில் ‘பிணமாக கிடந்த 35 வயது மதிக்கத்தக்கவரின் தலை, கழுத்து, நெஞ்சு ஆகிய பகுதிகளில் கல்லால் குத்தியும், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டதும், அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்து வந்ததும்’ தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவரது பெயர் கருப்பு என்பதும் ஆனால் அது அவருடைய முழுமையான பெயரா? என்பதும் தெரியவில்லை. அவரை பற்றிய வேறு எந்த தகவல்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.

சக தொழிலாளர்களிடம் விசாரணை

எனவே கொலை செய்யப்பட்டவர் யார்?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து கோயம்பேடு மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் சிலரை பிடித்து கோயம்பேடு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story