மாவட்ட செய்திகள்

தாம்பரம் முடிச்சூர் சாலையில்மழைநீர் கால்வாய் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்கலெக்டர் உத்தரவு + "||" + Rainwater Harvest Work

தாம்பரம் முடிச்சூர் சாலையில்மழைநீர் கால்வாய் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்கலெக்டர் உத்தரவு

தாம்பரம் முடிச்சூர் சாலையில்மழைநீர் கால்வாய் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்கலெக்டர் உத்தரவு
சென்னையை அடுத்த தாம்பரம் முடிச்சூர் சாலையில் நீண்ட காலமாக நடந்து வரும் மழைநீர் கால்வாய் பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டுமென நெடுஞ்சாலை துறையினருக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா உத்தரவிட்டார்.
தாம்பரம், 

மழை காலங்களில் பீர்க்கன்காரணை ஏரி, தாம்பரம் பெரிய ஏரி, பெருங்களத்தூர் ஏரி ஆகிய ஏரிகளில் இருந்து வெளியேறும் வெள்ள நீர் தாம்பரம் முடிச்சூர் சாலையில் தேங்கி கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டு வந்தது.

இதற்கு தீர்வுகாணும் விதமாக முடிச்சூர் சாலையில் காந்தி ரோடு சந்திப்பில் இருந்து பெருங்களத்தூர் வரை சாலையின் இரு பகுதிகளிலும் மழைநீர் கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, மழைநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் கடந்த 1½ ஆண்டுகளாக நடந்து வருகிறது.

ஆமை வேகத்தில்

இதில் காந்தி ரோடு சந்திப்பில் இருந்து பைபாஸ் பாலம் வரை 90 சதவீத பணிகள் முடிந்து விட்ட நிலையில், பைபாஸ் சாலையில் இருந்து பெருங்களத்தூர் வரையிலான பணிகள் பல்வேறு துறையினரிடேயே ஒருங்கிணைப்பு இல்லாததால் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.

சாலையில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெறும் இடங்களில் உள்ள மின் கம்பங்கள், மின் கேபிள்களை மாற்றி அமைக்க மின்வாரியமும், குடிநீர் குழாய் இணைப்புகளை மாற்றி அமைக்க குடிநீர் வடிகால் வாரியமும் போதிய நடவடிக்கைகள் எடுக்காததால் பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறையினர் கூறுகின்றனர்.

இதனால் 1 மணி நேரம் மழை பெய்தாலே முடிச்சூர் சாலையில் வெள்ள நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே இந்த பணிகளை விரைவாக முடிக்க பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

10 நாட்களுக்குள்...

இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நேற்று காலை முடிச்சூர் சாலையில் மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெறும் இடங்களை ஆய்வு செய்தார். அப்போது அவர், மின்வாரியம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை நேரில் அழைத்து அவர்கள் தரப்பில் செய்யவேண்டிய வேலைகளை உடனடியாக செய்து முடிக்க உத்தரவிட்டார்.

மேலும் மழை தொடங்கும் முன்பு மழைநீர் கால்வாய் அமைப்பதில் எஞ்சியுள்ள பணிகளை போர்க்கால அடிப்படையில் 10 நாட்களுக்குள் செய்து முடிக்கவும் நெடுஞ்சாலை துறையினருக்கு அவர் உத்தரவிட்டார்.

நிரந்தர தீர்வு

முடிச்சூர் சாலை வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வாக ரூ.20 கோடி செலவில் பைபாஸ் சர்வீஸ் சாலையில் ‘மூடு கால்வாய்’ அமைத்து வெள்ள நீரை அடையாறு ஆற்றில் சேர்க்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவாக தொடங்கவும் பொதுபணித்துறை அதிகாரிகளை, கலெக்டர் பொன்னையா கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது நகராட்சிகள் மண்டல பொறியாளர் முருகேசன், நெடுஞ்சாலை துறை உதவிகோட்ட பொறியாளர் ஆனந்த்ராஜ், பொதுப்பணிதுறை உதவி செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், தாம்பரம் நகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி, பெருங்களத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் குணசேகரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.