அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்


அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
x
தினத்தந்தி 11 Oct 2018 4:43 AM IST (Updated: 11 Oct 2018 4:43 AM IST)
t-max-icont-min-icon

குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அம்பத்தூர், 

அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர், எஸ்.எஸ்.நகர், அந்தோணி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1000 குடும்பங்கள் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றன. இவர்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, ரேஷன் கார்டு, சொத்துவரி உள்பட அரசின் அடிப்படை வசதிகள் அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கள்ளிக்குப்பம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணிதுறை அதிகாரிகள் அங்குள்ள 589 வீடுகள் கொரட்டூர் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருப்பதாகவும், எனவே அந்த வீடுகளை காலி செய்யக்கோரியும் நோட்டீஸ் வழங்கினர். அதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் அந்த தொகுதி எம்.எல்.ஏ.விடமும், முதல்-அமைச்சர் பிரிவிலும், மாவட்ட ஆட்சியரிடமும் இது தொடர்பாக மனுக்கள் அளித்தனர்.

முற்றுகை போராட்டம்

இதற்கிடையே, ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் வீடுகளுக்கான மின் இணைப்பை துண்டிக்கப் போவதாகவும், 2 நாட்களில் அந்த வீடுகளை இடித்து அகற்றப்போவதாகவும் பொதுப் பணித்துறை அதிகாரிகள், வீதி, வீதியாக சென்று ஒலி பெருக்கி மூலம் நேற்றுமுன்தினம் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த பெண்கள், மாணவ- மாணவிகள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று அம்பத்தூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுநல சங்க நிர்வாகிகள் தாசில்தாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் இந்த விவகாரம் குறித்து சென்னை மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதுபற்றி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அதனை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Next Story