சென்னையில் குற்றச்செயல்களை தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்கள்
சென்னை நகரில் குற்றச்செயல்களைத் தடுக்க 350 கண்காணிப்பு கேமராக்களை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கிவைத்தார்.
பெரம்பூர்,
சென்னை நகரில் செம்பியம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குற்றச் செயல்களைத் தடுப்பதற்காக நவீன தொழில் நுட்பத்துடன் 359 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கேமராக்களின் செயல்பாட்டை செம்பியம் போலீஸ் நிலையத்தில் இருந்தவாறு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கமிஷனர் தினகரன், புளியந்தோப்பு துணை கமிஷனர் சாய்சரண் தேஜஸ்வி, உதவி கமிஷனர்கள் அரிக்குமார், அழகேசன், இன்ஸ்பெக்டர்கள் ஜெகநாதன், தமிழ்வாணன் உள்ளிட்ட புளியந்தோப்பு மாவட்ட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இதைத்தொடர்ந்து பெரம்பூர் ரெயில்வே திருமண மண்டபத்தில் நடந்த விழிப்புணர்வு கூட்டத்தில் செம்பியம் சுற்றுவட்டார வியாபாரிகள், குடியிருப்புவாசிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோரும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:-
குற்றச்செயல்கள் குறைகிறது
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறியவும், அவர்களுக்கு தண்டனை வாங்கி தரும் ஆதாரங்களை பெறவும் கண்காணிப்பு கேமராக்கள் அவசியம். குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்கள் புதுப்புது வழிகளில் வித விதமான குற்றங்களை செய்து வருகின்றனர். அவர்களை கண்டறியவும், நம்மை நாமே பாதுகாத்து கொள்ளவும் கண்காணிப்பு கேமராக்கள் மிகவும் தேவை.
கண்காணிப்பு கேமரா என்பது அவசியமற்ற செலவு என்று நினைக்காமல் அதை அத்தியாவசியமான ஒன்றாக கருதவேண்டும். தற்போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வருவதால் குற்றச்செயல்களான வழிப்பறி, செயின் பறிப்பு செல்போன் பறிப்பு சம்பவங்கள் பெருமளவு குறைந்து உள்ளது.
பணிகள் தொடரும்
சென்னையில் உள்ள போலீஸ் நிலைய எல்லையை முழுவதுமாக கண்காணிப்புக்குள் கொண்டு வரும் முயற்சியில் செம்பியம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் சிறப்பாக பணி செய்து முடித்துள்ளார்.
யானைகவுனி போலீஸ் நிலையத்தை தொடர்ந்து இரண்டாவதாக செம்பியம் போலீஸ் நிலைய எல்லையில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது. மற்ற பகுதிகளில் கேமராக்கள் பொருத்தும் பணி தொடரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக செம்பியம் போலீஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு அறை மற்றும் கல்வெட்டை கூடுதல் கமிஷனர் தினகரன் திறந்துவைத்தார்.
செம்பியத்தில் ரெயில் நிலையம், பூங்காக்கள், வழிப்பறி அதிகம் நடக்கும் பகுதிகளான பட்டேல் சாலை, ரமணா நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.
Related Tags :
Next Story