பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்


பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 11 Oct 2018 9:30 PM GMT (Updated: 11 Oct 2018 4:58 PM GMT)

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தேனியில் நடந்தது.

தேனி,

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்பட 7 பேர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ன்படியும், தமிழக அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையிலும் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வருகின்றன.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழக கவர்னருக்கு தபால் அனுப்பும் போராட்டம் தேனி தபால் அலுவலகம் முன்பு நேற்று நடந்தது.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் தலைமை தாங்கினார். செங்கதிர் இயக்க ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார், வன வேங்கைகள் பேரவை மாநில துணை செயலாளர் உலகநாதன், பழங்குடி தமிழர் இயக்க நிறுவனர் சிவநரேந்தர், மாவட்ட செயலாளர் காமராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்திய அரசியலமைப்பு சட்டம் 161-ன்படியும், 9-9-2018 அன்று நடந்த தமிழக அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படியும் பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று எழுதிய தபால் அட்டைகளை கவர்னரின் முகவரிக்கு அனுப்பி வைத்தனர். 200-க்கும் மேற்பட்ட தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டன. 

Next Story