அதிகாரிகள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்


அதிகாரிகள் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் - அமைச்சர் கடம்பூர் ராஜூ வேண்டுகோள்
x
தினத்தந்தி 12 Oct 2018 3:15 AM IST (Updated: 11 Oct 2018 11:20 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உரிய காலத்தில் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ கேட்டுக்கொண்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் மற்றும் வாழ்வாதாரம் மேம்பாடு குறித்த கண்காணிப்புக்குழு கூட்டம் மதியம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி, மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வேளாண்மை துறைக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்து, திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. அதன் காரணமாகத்தான் வெள்ளம், வறட்சி வந்த போது, தொடர்ந்து 5 ஆண்டுகளாக தமிழகம் வேளாண் உற்பத்தியில் முதல் இடத்தை பிடித்து மத்திய அரசின் விருதை பெற்று வருகிறது. அரசு மானிய உதவிகளை குறித்த காலத்தில் உடனடியாக வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் பருவ காலத்தில் சாகுபடிகள் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும். தூத்துக்குடி மாவட்டம், மானாவாரி நிலங்கள் மற்றும் தாமிரபரணி வடிநில பகுதி என இரு பகுதிகளாக உள்ளது. எனவே, வேளாண் சமந்்தப்பட்ட துறை அலுவலர்கள், விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளைஉரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறட்சிக் காலத்திலும், விவசாயிகளுக்கு தேவையான மாற்று வருவாய் திட்டங்களையும், செயல்படுத்த வேண்டும். நமது மாவட்டத்தில், பயிர் காப்பீட்டுத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி முழுமையாக செயல்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு, விவசாயிகளுக்கு ரூ.277 கோடி பயிர் காப்பீடு தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விவசாயிகளுக்கும் விரைவில் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆண்டு பருவ மழை சிறப்பாக உள்ளது.

விவசாயிகள் முழுமையான மகசூல் பெற வேளாண் அலுவலர்கள் உதவிட வேண்டும். அரசு மானியங்கள், விதைகள் சரியான நபர்களுக்கு சரியான நேரத்தில் கிடைத்திட வேண்டும்.

வேளாண்மை சார்ந்த துறைகளின் மூலம் அரசு விவசாயிகளுக்கு செயல்படுத்தக் கூடிய அனைத்து திட்டங்கள் குறித்து, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி திட்டங்களின் முழு பயன்களும் விவசாயிகள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றும் வகையில் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், உதவி கலெக்டர்(பயிற்சி) அனு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, வேளாண்மை துறை இணை இயக்குநர் புருஷோத்தமன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) பாலசுப்பிரமணியம், தூத்துக்குடி மண்டல கூட்டுறவு இணைப்பதிவாளர் அருளரசு, முன்னாள் எம்.எல்.ஏ மோகன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். 

Next Story