நெல்லை-ஜபல்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரெயில் 3 மாதங்களுக்கு இயக்கப்படுகிறது

நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
நெல்லை,
நெல்லையில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஜபல்பூரில் இருந்து இந்த ரெயில் வியாழக்கிழமை தோறும் காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, நெல்லைக்கு சனிக்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 4 மணிக்கு புறப்பட்டு, திங்கட்கிழமை காலை 11.15 மணிக்கு ஜபல்பூரை சென்றடைகிறது. இந்த சிறப்பு ரெயில் வருகிற டிசம்பர் மாதம் வரை 3 மாதங்களுக்கு இயக்கப்படுகிறது.
இந்த ரெயிலில் 3 குளிர்சாதன வசதி பெட்டிகள், 10 தூங்கும் வசதி கொண்ட இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 4 பொது பெட்டிகள் மற்றும் சரக்கு பெட்டியுடன் இணைந்த 2 பொது பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். நெல்லையில் இருந்து புறப்படும் சிறப்பு ரெயில் கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி மற்றும் ஆந்திரா மாநிலம் வழியாக ஜபல்பூருக்கு செல்கிறது.
முதல் ரெயில் ஜபல்பூரில் இருந்து நேற்று காலை புறப்பட்டது. இந்த ரெயில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2.45 மணிக்கு நெல்லையை வந்தடைகிறது. பின்னர் மாலை 4 மணிக்கு நெல்லையில் இருந்து ஜபல்பூருக்கு ரெயில் புறப்பட்டு செல்கிறது.
இந்த தகவலை மதுரை ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story