இலங்கைக்கு கடத்த முயற்சி: 75 கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது
இலங்கைக்கு கடத்த முயன்றபோது 75 கிலோ கஞ்சாவையும், காரையும் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து வாலிபரை கைது செய்தனர். தப்பி ஓடிய நபரை தேடிவருகின்றனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வழியாக இலங்கைக்கு கஞ்சா கடத்தி செல்லப்பட உள்ளதாக சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து சுங்கத்துறை உதவி ஆணையர் ராஜ்குமார் மோசஸ் உத்தரவின்பேரில் கண்காணிப்பாளர்கள் முனியசாமி, பிரேம்பாபு உள்ளிட்டோர் தங்கச்சிமடம் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது தங்கச்சிமடம் தர்கா பஸ் நிறுத்தம் அருகில் உள்ள காளி கோவில் தெரு வழியாக வந்த காரை மடக்கி நிறுத்தினர். அதிகாரிகளை கண்டதும் காரில் இருந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார். உடனே காரில் இருந்த மற்றொரு நபரை மடக்கி பிடித்த அதிகாரிகள் காரை சோதனையிட்டபோது அதில் 4 பிளாஸ்டிக் சாக்குபைகளில் 75 கிலோகஞ்சா இருந்தது. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும். இதனை தொடர்ந்து கஞ்சாவை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரில் இருந்தவரிடம் விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் அவர் ராமநாதபுரம் பிள்ளைமடம் முருகேசன் மகன் பிரபாகரன் என்ற பிரபு(வயது 28) என்பதும், வாலாந்தரவை பகுதியில் இருந்து பாலா என்பவர் இந்த கஞ்சாவை கொண்டு வந்து இலங்கைக்கு படகில் அனுப்ப திட்டமிட்டிருந்ததும் தெரிந்தது. கேரளாவில் இருந்து வாங்கி வரப்பட்ட இந்த கஞ்சா அதிக விலை மதிப்புடையது என்பதும், தரம் மிகுந்த இந்த கஞ்சாவை தங்கச்சிமடம் வழியாக படகில் கொண்டு சென்று இந்திய கடல் எல்லையில் இலங்கையில் இருந்து வரும் நபரிடம் கொடுக்க திட்டமிட்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்த அதிகாரிகள் பிரபாகரனை கைது செய்து மேல் விசாரணை செய்து வருகின்றனர். தப்பி ஓடிய வாலாந்தரவையை சேர்ந்த பாலா என்பவரை தேடிவருகின்றனர். இவருக்கு கஞ்சாவை வழங்கியது யார், இதில் மேலும் தொடர்புடைய நபர்கள் யார் என்பது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story