இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் பறிமுதல் கடலோர காவல்படை நடவடிக்கை


இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் பறிமுதல் கடலோர காவல்படை நடவடிக்கை
x
தினத்தந்தி 11 Oct 2018 11:00 PM GMT (Updated: 11 Oct 2018 6:46 PM GMT)

இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.10 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகளை கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர்.

வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கோடியக்காட்டில் தனியாருக்கு சொந்தமான கீற்று கொட்டகையில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக வேதாரண்யம் கடலோர காவல் படையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து கடலோர காவல்படை துணை சூப்பிரண்டு கலிதீர்த்தான், இன்ஸ்பெக்டர் மும்தாஜ்பேகம் மற்றும் போலீசார் அங்கு சென்று அந்த கீற்று கொட்டகையை சோதனையிட்டனர். அப்போது அங்கு 15 மூட்டைகளில் 960 கிலோ உரம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இவற்றை பறிமுதல் செய்த கடலோர காவல் படையினர், இந்த உர மூட்டைகள் எதற்காக அங்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவைகள், தேயிலை தோட்டத்துக்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி உரம் என்பதும், கோடியக்காட்டில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கீற்று கொட்டகையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.

இதேபோல் கடந்த மே மாதம் வேதாரண்யம் அருகே சிறுதலைகாடு கிராமத்தில் ரூ.6 லட்சம் மதிப்புள்ள உர மூட்டைகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story