வடிகாலில் அடைப்பு ராமேசுவரம் கோவிலில் அபிஷேக நீர் வெளியேற வழியில்லை
ராமேசுவரம் கோவிலில் வடிகாலில் அடைப்பால் அபிஷேக நீர் வெளியே வழியில்லாமல் உள்ளது. பிரகாரத்தில் மழை நீர் தேங்குகிறது.
ராமேசுவரம்,
ராமேசுவரம் கோவில் இந்தியாவில் உளள் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்றாகும். அதுபோல் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் கோவிலுக்கு வந்து கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் புனித நீராடி சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்நிலையில் லேசாக மழை பெய்தால் கூட மழை நீர் சாமி சன்னதி பிரகாரம்,அம்பாள் சன்னதி கொடிமர பிரகாரம் போன்ற பகுதிகளில் தேங்கி நிற்கும் ஒரு சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. மழை நீர் செல்ல கோவிலின் பிரகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் மழை நீர் செல்ல வழியில்லாமல் பிரகாரத்தில் தேங்கி நிற்கிறது.தேங்கி நிற்கும் மழை நீர் மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இது மட்டுமல்லாமல் கருவறையில் உள்ள சாமிக்கு அபிஷேகம் நடைபெற்ற பின்பு அந்த அபிஷேக தண்ணீர் கூட வடிகால் வழியாக செல்ல முடியாமல் சாமி சன்னதி முதல் பிரகாரத்தின் வடிகாலில் தேங்கி நிற்கிறது. கருவறையில் சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட நீர் சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து வெளியே செல்ல வழியில்லாமல் வடிகால் பகுதியிலேயே தேங்கி நின்றது.
அங்கு தேங்கி நிற்கும் அபிஷேக நீரை பெண் ஒருவர் தொடர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
கோவிலில் இருந்து வெளியேறும் வடிகால் பகுதியை ரத வீதிகளில் உள்ள சில தனியார் விடுதிகள் அடைத்துள்ளதுடன் அதன் வழியாக கழிவுநீரை விடுவதாக கூறப்படுகிறது.
எனவே ராமேசுவரம் கோவில் அதிகாரிகளும், நகராட்சி அதிகாரிகளும் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story