நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை என்ன? நேரில் ஆஜராகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் ஐகோர்ட்டு கேள்வி
நீர் நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து நேற்று மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகிய 5 மாவட்ட கலெக்டர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். மதுரை மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
மதுரை,
மதுரை வண்டியூர் கண்மாய் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு அதிகாரிகள் துணையுடன் பட்டா வழங்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால், தண்ணீர் நிலத்தின் அடியில் செல்லாமல் நிலத்தடி நீரோட்டம் தடைபடுகிறது. இதே போல் மதுரை மாவட்டம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் மற்றும் நீர்வழி பாதைகளை பலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நீர் நிலைகளில் தண்ணீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. நீர்வழி பாதைகள் ஆக்கிரமிப்பு காரணமாக தண்ணீர் முறையாக செல்வதில்லை.
இதனால் மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் 600 அடிக்கு கீழ் சென்றுவிட்டது. இதே நிலை நீடித்தால் மாவட்டமே தண்ணீரின்றி பாலைவனமாக மாறிவிடும். எனவே நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளில் உள்ள தற்காலிக, நிரந்தர கட்டிடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நீர்நிலைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இதேபோன்று குடிநீருடன் கழிவுநீர் கலப்பதை தடுக்கும் விதமாக கழிவுநீர் குழாய்கள் மற்றும் குடிநீர் குழாய்களை குறிப்பிட்ட இடைவெளி விட்டு அமைக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, நீர்நிலைகளை பாதுகாப்பது தொடர்பான செயல்திட்டம் தயாரித்து அதை நிறைவேற்ற கலெக்டர் தலைமையிலான குழு அமைக்க வேண்டும். இந்த வழக்கில் மதுரை மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்ட கலெக்டர்களும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படுகிறார்கள். வருகிற 11-ந்தேதி (அதாவது நேற்று) 5 மாவட்ட கலெக்டர்களும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்தநிலையில் அந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, கிருஷ்ணன்ராமசாமி ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மதுரை கலெக்டர் நடராஜன், ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ், சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன், திண்டுக்கல் கலெக்டர் வினய், தேனி கலெக்டர் மரியம் பல்லவி பல்தேவ் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் ஆஜராகி, தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்தனர்.
அவற்றில், நீர்நிலைகள் மற்றும் நீர் வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற குழு அமைத்து பணிகளை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏராளமான நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. ஏராளமான நீர்நிலைகளில் தண்ணீர் தேக்கி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன என்று கூறியிருந்தனர்.
நீதிபதிகள் கலெக்டர்களிடம் “நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன, இது வரை எத்தனை இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன? நீர்நிலைகளில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை என்ன?“ என்பது குறித்து கேள்வி எழுப்பினர். பின்னர் இதுகுறித்து வருகிற 26-ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story