கீழடி அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 31-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு


கீழடி அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் 31-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் - மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 7:30 PM GMT)

கீழடி அகழாய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் வருகிற 31-ந் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மதுரை மீனாட்சிநகரை சேர்ந்த பிரபாகர் பாண்டியன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை, 

வைகை ஆற்றங்கரை நாகரிகம் தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு செய்தார். இதில் மதுரையை அடுத்த கீழடி பகுதியில் பழங்கால நகரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டில் அவர் தலைமையிலான குழுவினர் 2 கட்ட அகழாய்வில் ஈடுபட்டனர்.

இதில் 5,300-க்கும் மேற்பட்ட பழமையான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அடுத்தகட்ட அகழாய்வுக்கு தயாராகி வந்த நேரத்தில், அவரை அசாம் மாநில தொல்லியல் துறைக்கு இடமாற்றம் செய்து கடந்த ஆண்டு மத்திய அரசு உத்தரவிட்டது.
அடுத்த கட்ட ஆய்வில் தற்போது வேறொரு அதிகாரி ஈடுபட்டுள்ளார். முதல் 2 கட்ட ஆய்வு அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்து வருகிறார்.

இதற்கிடையே ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயார் செய்யக்கூடாது என்றும், அந்த அறிக்கையை பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர்தான் தயார் செய்ய வேண்டும் என்று கடந்த 3-ந்தேதி மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டு உள்ளது. மேலும், அகழாய்வில் கிடைத்த பொருட்களை பெங்களூருவில் வைத்து அமர்நாத் ராமகிருஷ்ணன் பாதுகாத்து வருகிறார். அவற்றையும் புதிய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக தொல்லியல் ஆய்வுகளை மேற்கொள்ளும் அதிகாரிதான், அறிக்கையையும் தயார் செய்ய வேண்டும். இந்த அறிக்கைதான் மிக மிக முக்கிய ஆவணம். ஏனென்றால், பழங்கால நாகரிகம் தொடர்பாக செய்யப்பட்ட ஆய்வில் கிடைத்த சான்றுகள் எந்த காலத்தை சேர்ந்தவை என்பது அறிக்கையின் மூலமாகத்தான் உறுதிப்படுத்தப்படும். ஆனால் அமர்நாத் ராமகிருஷ்ணன் ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டதில் உள்நோக்கம் இருக்கிறது. அதாவது, நம் நாட்டில் அசோகர் கால கல்வெட்டுகளில் உள்ள எழுத்துகள்தான் பழமையானவை என்று வடஇந்திய அறிஞர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள், செங்கற்கள் போன்றவற்றில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்டு உள்ளன. அவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் அசோகர் கால கல்வெட்டுகள் பின்னுக்கு தள்ளப்படும்.

எனவே தமிழ் கலாசாரத்தின் பழமையை மறைக்கும் நோக்கத்தில் சில அதிகாரிகளின் துணையுடன் மத்திய அரசு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. எனவே கீழடி அகழாய்வு அறிக்கை தயாரிக்க பெங்களூரு தொல்லியல் துறை சூப்பிரண்டுவை நியமித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். அந்த அறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன்தான் தயார் செய்ய வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களில் இரண்டை மட்டும் ஆய்வுக்காக அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்ததில், 2,200 ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவை என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மற்ற பொருட்களை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆய்வகத்துக்கு அனுப்பி பரிசோதிக்கவும் ஏற்பாடு செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இதே போல் சென்னையை சேர்ந்த கனிமொழிமதி தாக்கல் செய்த மனுவில், ‘கீழடி அகழாய்வில் கிடைத்த பொருட்களை அங்கேயே அருங்காட்சியகம் அமைத்து பாதுகாக்க உத்தரவிட வேண்டும். மேலும் அங்கு புதைந்துள்ள பொருட்களை அகழாய்வின் மூலம் எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுக்கள் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தன.

அப்போது, தமிழக அரசின் கூடுதல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன் ஆஜராகி, “கீழடி 4-ம் கட்ட அகழாய்வில் தங்க ஆபரணங்கள் உள்பட மொத்தம் 7 ஆயிரம் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அங்கு 16 மீட்டர் ஆழத்தில் தோண்டியபோது தங்க ஆபரணங்கள் கிடைத்துள்ளன. 5-ம் கட்ட அகழாய்வு நடத்த அனுமதி கேட்டு மத்திய தொல்லியல் துறையிடம் விண்ணப்பித்து உள்ளோம். கீழடியில் எடுக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்களின் வயதை கண்டறிவதற் காக அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பீட்டா ஆய்வகத்துக்கு அனுப்பப்பட உள்ளன” என வாதாடினார்.

விசாரணை முடிவில், “கீழடியில் நடந்த முதல் 2 கட்ட அகழாய்வின் ஆய்வறிக்கையை அமர்நாத் ராமகிருஷ்ணன் தயாரித்து வருகிற 31-ந்தேதி கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 31-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Next Story