போரூர் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை புதரில் வீசிய பெண்


போரூர் அருகே பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை புதரில் வீசிய பெண்
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 11 Oct 2018 7:34 PM GMT)

போரூர் அருகே, பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை ஒன்று புதரில் வீசப்பட்டு கிடந்தது.

பூந்தமல்லி,

சென்னை போரூரை அடுத்த காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மின்சார சுடுகாடு உள்ளது. இதன் அருகே ஏராளமான கடைகள் உள்ளன. இங்குள்ள மரப்பலகை கடையின் அருகில் உள்ள புதரில் நேற்று முன்தினம் இரவு ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது.

இதனால் திடுக்கிட்ட அங்கிருந்த காவலாளி ரவி, அங்கு சென்று பார்த்தார். அப்போது பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை தொப்புள் கொடியுடன் ஒரு லுங்கியில் சுற்றப்பட்டு அந்த புதரில் வீசப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை

இது குறித்து அருகில் உள்ள போலீஸ் சோதனை சாவடிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தைச்சேர்ந்த ரத்தினக்குமார் என்ற போலீஸ்காரர் உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று புதரில் இருந்த பச்சிளம் குழந்தையை மீட்டார்.

பின்னர் அந்த குழந்தையை போரூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழந்தை நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

கண்காணிப்பு கேமராவில் பதிவு

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், பிறந்து 4 நாட்களே ஆன அந்த குழந்தையை கொண்டு வந்து வீசியது யார்? என்று வளசரவாக்கம் போலீசார் விசாரிக்க தொடங்கினார்கள். மேலும் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்தனர்.

அதில், சுடிதார் அணிந்து வந்த பெண் ஒருவர், கையில் பெரிய பையுடன் வருகிறார். கடையின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் வேனின் அருகில் மறைவாக நின்று கொண்டு யாராவது வருகிறார்களா? என்று சுற்றும் முற்றும் பார்க்கிறார். பின்னர் சிறிதுநேரம் கழித்து அந்த பையை கீழே வைத்து விட்டு அதில் இருந்து குழந்தையை மட்டும் வெளியே எடுத்து கீழே வைக்கிறார். அதன்பிறகு அந்த குழந்தையை தூக்கிச்சென்று அந்த புதரில் போட்டுவிட்டு காலி பையுடன் திரும்பி வருகிறார்.

பெண்ணுக்கு வலைவீச்சு

அவருடன் மற்றொருவரும் வருகிறார். அவரது நிழல் மட்டும் தெரிகிறது. பின்னர் அவருடன், அந்த பெண் அங்கிருந்து நடந்து செல்வது போல் காட்சிகள் பதிவாகி இருந்தது. எனவே அந்த பெண் குழந்தையை 2 பேர் வந்து புதரில் வீசி விட்டு சென்று இருப்பது தெரியவந்துள்ளது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்ணின் உருவத்தை வைத்து அந்த பெண் யார்? என போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண் குழந்தை என்பதால் வளர்க்க மனம் இல்லாமல் வீசினாரா? அல்லது தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் இந்த செயலில் ஈடுபட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடந்த ஆகஸ்டு மாதம் சுதந்திர தினத்தன்று பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தையை வளசரவாக்கத்தில் குடியிருப்பு பகுதியில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு சென்றார்கள். அந்த குழந்தையை அப்பகுதி மக்கள் மீட்டு ‘சுதந்திரம்’ என்று பெயர் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story