பூந்தமல்லியில் மனைவியை கொன்று கணவர் தூக்குப்போட்டு தற்கொலை
மனைவியை கொலை செய்து விட்டு, கணவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பூந்தமல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூந்தமல்லி,
பூந்தமல்லி குமணன்சாவடி, தெருவீதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 25). கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி துர்கா(23). இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சுப்ரியா(3), சிவன்யா(2) என 2 மகள்கள் உள்ளனர்.
வெங்கடேசனுக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வருவார். இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை
நேற்று முன்தினம் இரவு கணவன்-மனைவி இடையே வழக்கம்போல் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து வெங்கடேசன், தனது 2 மகள்களையும் அதே பகுதியில் உள்ள துர்காவின் பாட்டி மீராபாய் வீட்டில் கொண்டுபோய் விட்டு விட்டு வந்தார்.
நேற்றுகாலையில் எழுந்த குழந்தைகள் இருவரும் பெற்றோரிடம் அழைத்துச் செல்லுமாறு கூறி அழுதன. இதனால் மீராபாய், குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு துர்கா வீட்டுக்கு சென்றார். கதவு உள்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. நீண்டநேரம் கதவை தட்டிப்பார்த்தும் திறக்கவில்லை. சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் பின்பகுதியில் உள்ள ஜன்னலை திறந்து உள்ளே பார்த்தனர்.
அப்போது வீட்டின் உள்ளே வெங்கடேசன் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கட்டிலில் துர்கா அசைவற்று கிடந்தார். அவரை எழுப்ப முயன்றும் முடியவில்லை. அதன்பிறகுதான் அவரும் பிணமாக கிடப்பது தெரிந்தது.
குடும்பத்தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு, வெங்கடேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
குடும்பத் தகராறு
இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று கணவன்-மனைவி இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:-
வெங்கடேசனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். பூந்தமல்லி நகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்த துர்காவும், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வேலையில் இருந்து நின்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
உறவினரை திருப்பி அனுப்பினார்
நேற்றுமுன்தினம் இரவும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால் மகள்கள் இருவரையும் துர்காவின் பாட்டி வீட்டில் விட்டு விட்டு வீட்டுக்கு வந்த வெங்கடேசன், மீண்டும் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதற்கிடையில் நள்ளிரவில் அவரது இளைய மகள் அழுததால் அவளை வெங்கடேசன் வீட்டில் விடுவதற்காக அவரது உறவினர் அழைத்து வந்தார். அப்போது வெங்கடேசன், துர்கா தூங்கி விட்டாள். காலையில் வந்து மகளை விடும்படி கூறி மகளுடன் உறவினரை திருப்பி அனுப்பினார். அவர், வீட்டுக்குள் பார்க்கும்போது துர்கா கட்டிலில் தூங்கிய நிலையில் இருந்ததால் அவரும் குழந்தையுடன் திரும்பிச் சென்று விட்டார்.
மனைவியை கொலை செய்வதற்காகத்தான் வெங்கடேசன், தனது குழந்தைகளை மனைவியின் பாட்டி வீட்டில் விட்டு வந்து உள்ளார். அப்போதே துர்காவை கொலை செய்து உள்ளார். அதன்பிறகு வெங்கடேசனும், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
அனாதையான குழந்தைகள்
ஆனால் துர்காவின் உடலில் காயங்கள் ஏதும் இல்லை. எனவே துர்காவின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்தாரா? அல்லது விஷம் கொடுத்து கொன்றாரா? என்பது தெரியவில்லை.
துர்காவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகுதான் அவர் எப்படி கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
தாய்-தந்தை இருவரும் இறந்துவிட்டதை அறியாமல் அவர்களது 2 மகள்களும் பாட்டி மீராபாய் உடன் இருப்பதை பார்த்து அந்த பகுதி மக்களும் சோகத்தில் மூழ்கினர். கொலையான துர்காவின் பெற்றோர் இறந்து விட்டதால், அவரது பாட்டி மீராபாய்தான் துர்காவை வளர்த்து ஆளாக்கி, திருமணமும் செய்து வைத்தார். தற்போது துர்காவின் 2 குழந்தைகளும் அனாதைகளாகி அவரது பாட்டியிடமே அடைக்கலமாகி இருப்பது பெரும் சோகத் தை ஏற்படுத்தி உள்ளது.
துர்காவுக்கு திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் இதுபற்றி ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story