குமரி மாவட்டத்தில் 5 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது


குமரி மாவட்டத்தில் 5 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது
x
தினத்தந்தி 11 Oct 2018 10:45 PM GMT (Updated: 11 Oct 2018 10:13 PM GMT)

குமரி மாவட்டத்தில் 5 கூட்டுறவு சங்கங்களுக்கு நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் நடந்தது.

நாகர்கோவில்,

ஆவின், கூட்டுறவுத்துறை, மீன்வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கதர் கிராம தொழில் வாரியம் ஆகியவற்றுக்கு உட்பட்ட மாவட்ட அளவிலான 8 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 6-ந் தேதி நடந்தது. 5 கூட்டுறவு சங்கங்களுக்கு மட்டுமே போட்டி இருந்தது. ஆவின், கைத்தறி மற்றும் துணிநூல்துறை ஆகியவற்றுக்கு உட்பட்ட 3 கூட்டுறவு சங்கங்களுக்கு போட்டி இல்லாததால் அவற்றுக்கு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்த நிர்வாகக்குழு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

எனவே குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணையம், குமரி மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனைக்குழு, அகஸ்தீஸ்வரம்- தோவாளை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், கல்குளம்- விளவங்கோடு தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம், குழித்துறை பனைவெல்லம் கூட்டுறவு சம்மேளனம் ஆகிய 5 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நேற்று நடந்தது.

குமரி மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய நிர்வாகக்குழு தேர்தல் நாகர்கோவில் செட்டிக்குளத்தில் உள்ள அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் நேற்று முன்தினம் நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலயம் அருகில் உள்ள பரதர் தெற்கு ஊர் சமுதாய அரங்கத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து நேற்று அங்கு வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் திமிர்த்தியூஸ் தலைமையிலான ஒரு அணியினரும், முன்னாள் மாவட்ட மீனவர் கூட்டுறவு இணைய தலைவர் சகாயம் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

எனவே திமிர்த்தியூசுக்கு ஆதரவாக குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஏ.அசோகன் தலைமையிலான நிர்வாகிகளும், சகாயம் ஆதரவாளர்களும் புனித சவேரியார் பேராலயம் அருகே திரண்டனர். இதனால் நேற்று காலையில் இருந்து தேர்தல் முடியும் வரை அப்பகுதி பரபரப்புடன் காட்சி அளித்தது. அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஏராளமான போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

மாலை வரை நடந்த மீனவர் கூட்டுறவு இணைய தேர்தலில் மொத்த வாக்காளர்கள் 109 பேரும் வாக்களித்தனர் என்றும், இதனால் இந்த தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு ஆகியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல் அகஸ்தீஸ்வரம்- தோவாளை தாலுகா வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று காலை முதல் மாலை வரை நடந்தது. இந்த தேர்தலில் கிருஷ்ணதாஸ் தலைமையிலான ஒரு அணியினரும், முன்னாள் ஊராட்சி ஒன்றிய தலைவர் பூதலிங்கம் தலைமையிலான ஒரு அணியினரும் போட்டியிட்டனர்.

இங்கு ஏராளமானோர் திரண்டிருந்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்த பகுதியிலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இந்த தேர்தலில் மொத்தம் உள்ள 1,604 வாக்காளர்களில் 848 பேர் வாக்களித்தனர். அதனால் இங்கு பதிவான வாக்குகள் சதவீதம் 53 ஆகும்.

இதேபோல் குமரி மாவட்ட ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்க தேர்தலில் மொத்தம் உள்ள 4,267 வாக்காளர்களில் 1,538 பேர் வாக்களித்தனர். இதனால் 37 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது.

கல்குளம்- விளவங்கோடு வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 23 வாக்காளர்களில் 1,376 பேர் வாக்களித்தனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 12 ஆகும்.

குழித்துறையில் உள்ள பனைவெல்லம் கூட்டுறவு சம்மேளனத்துக்கு நடந்த தேர்தலில் மொத்தம் உள்ள 30 வாக்காளர்களில் 29 பேர் வாக்களித்தனர். அதனால் இதன் வாக்குப்பதிவு சதவீதம் 97 ஆகும்.

நேற்று தேர்தல் நடந்த 5 கூட்டுறவு சங்கங்களுக்கும் இன்று(வெள்ளிக்கிழமை) ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

Next Story