காடம்பாறை மலைப்பாதையில் கோர விபத்து : மினிலாரி கவிழ்ந்து 5 பேர் பலி; 12 பேர் படுகாயம்
சந்தைக்கு சென்று பொருட்கள் வாங்கிக்கொண்டு வந்தபோது காடம்பாறை மலைப்பாதையில் நள்ளிரவில் மினிலாரி கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள். 12 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த கோர விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை வனச்சரகத்துக்கு உட்பட்ட காட்டுப்பட்டி, குழிப்பட்டி, குறுமலை, மேல் குறுமலை, மாவடப்பு ஆகிய மலைக்கிராமங்களில் மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள், பல கிலோ மீட்டர் தூரம் நடந்து திருமூர்த்தி மலை பகுதிக்கு சென்று தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வருவார்கள்.
இதுதவிர தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை 15 நாட்களுக்கு ஒருமுறை கூட்டாக சேர்ந்து மினி லாரிகளில் ஏற்றிக்கொண்டு, பொள்ளாச்சி, கோட்டூர் பகுதிகளில் நடைபெறும் சந்தைக்கு சென்று விற்பனை செய்வார்கள். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு திரும்பி வருவதும் வழக்கம்.
இதுபோல் நேற்று முன்தினம் மலைவாழ் மக்கள் மினி லாரியில் பொள்ளாச்சி, கோட்டூர் பகுதிகளில் உள்ள சந்தைக்கு சென்று, தங்களது விளை நிலங்களில் விளைந்த நிலக்கடலையை விற்பனை செய்தனர். பின்னர் அங்கு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு, அதே மினி லாரியில் தங்களது கிராமங்களுக்கு திரும்பினர். மினிலாரியில் மொத்தம் 18 பேர் பயணம் செய்தனர். இதில் பலர் லாரியின் பின்புறத்தில் நின்று கொண்டிருந்தனர்.
வால்பாறை- பொள்ளாச்சி சாலையில் காடம்பாறை மலைப்பாதையில் மினி லாரி சென்று கொண்டிருந்தது. மினிலாரியை டிரைவர் ராஜன் (வயது 40) என்பவர் ஓட்டினார். நள்ளிரவு 11 மணி அளவில் 8-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்றபோது மினி லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.
பின்னர் கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரத்தில் உள்ள பாறைகளில் மோதி சுமார் 20 அடி பள்ளத்தில் மினிலாரி கவிழ்ந்து நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். மினிலாரிக்குள் சிக்கியவர்கள் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் மிதந்தனர். செல்வி (40), மல்லப்பன் (40) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் வால்பாறை வனச்சரக வனத்துறையினர், காடம்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனங்களில் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அவர்களில் வெள்ளையன் (45), ராமன் (45), தன்னாசி (34) ஆகிய 3 பேரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தனர். படுகாயம் அடைந்த டிரைவர் ராஜன், குருமலையை சேர்ந்த திருமன் (45), முருகன் (15), மாவடப்பு பகுதியை சேர்ந்த காளியம்மாள் (35), முரளி(18), சீதை (24), சித்ரா (24), மாரியம்மாள் (30), திருமாத்தாள் (40), மாகாளி (40), செல்வி (35), பச்சயம்மாள் (25) ஆகிய 12 பேர் பொள்ளாச்சி மற்றும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.இந்த விபத்து குறித்து காடம்பாறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயசூரியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், அதிவேகமாக மினி லாரியை ஓட்டியதும், லாரியில் பின் பகுதியில் நின்று கொண்டு பயணம் செய்ததால் அதிக பாரத்தால் பின்பகுதி கீழே இழுத்ததும் தான் விபத்துக்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளான மினிலாரியில் வெள்ளையன் மற்றும் அவரது மனைவி செல்வி, மகன்கள் ராஜ்குமார் (10), முருகன் (15) ஆகியோர் சென்றனர். இதில் வெள்ளையன், செல்வி ஆகியோர் உயிரிழந்தனர். முருகன் தலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். ராஜ்குமார் காயம் ஏதுமின்றி உயிர்தப்பினார். இருந்தபோதிலும் பெற்றோரை இழந்து விட்டனரே என்று மகன்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. விபத்து நடந்த பகுதி ஆட்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதி என்பதால் தகவல் தெரிவிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டு உள்ளது. படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியவர்களை உடனடியாக மீட்க முடியவில்லை என்று விபத்தில் சிக்கியவர்கள் கூறினர். இந்த விபத்து சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story