ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு: வடமாநில கொள்ளையனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை


ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு: வடமாநில கொள்ளையனை காவலில் எடுத்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 11 Oct 2018 9:45 PM GMT (Updated: 11 Oct 2018 8:23 PM GMT)

ஓடும் ரெயிலில் பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்ததாக கைது செய்யப்பட்ட வடமாநில கொள்ளையனை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவை,


திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து கோழிக்கோடு செல்வதற்காக யஷ்வந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்தார். திருப்பூர்-கோவை இடையே ரெயில் வரும் போது பானுமதி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு ஓரு ஆசாமி தப்பி ஓடி விட்டான். இதுகுறித்து கோவை ரெயில்வே போலீசில் பானுமதி புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் அரக்கோணம் அருகே கொள்ளையில் ஈடுபட்ட வடமாநில ஆசாமியை ரெயில்வே போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் இவன்தான் பானு மதியிடம் 10 பவுன் தங்க சங்கிலி பறித்தவன் என்பதும் இவன் நாக்பூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் உத்தம்பட்டேல்(வயது 32) என்பதும் தெரியவந்தது. பின்னர் அவனை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர். இவன் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஜோலார்பேட்டை உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயிலில் நடந்த கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன.

இந்த நிலையில் உத்தம்பட்டேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை ரெயில்வே போலீசார் திட்டமிட்டனர். இதை தொடர்ந்து கோவை 6-ம் எண் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கோவை ரெயில்வே போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் ரெயில் கொள்ளையனை 5 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டிருந்தனர்.

அந்த மனு மாஜிஸ்திரேட்டு முன்பு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து உத்தம்பட்டேலை 5 நாள் காவலில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட்டு அனுமதி அளித்தார். அதன்பேரில் கோவை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தனிப்படையினர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தம்பட்டேலை பலத்த பாதுகாப்புடன் அவனது சொந்த ஊரான நாக்பூரில் உள்ள ஜாரிபக்கர் கிராமத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்து வருகிறார்கள். ரெயில் கொள்ளையன் உத்தம்பட்டேல் ஓடும் ரெயிலில் யார்-யாரிடம் கொள்ளையில் ஈடுபட்டான்? அவனிடம் நகைகளை இழந்தது யார்? என்பது குறித்து கோவை ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story