புதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி வங்கிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்


புதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதல்; பெண் பலி வங்கிக்கு சென்று திரும்பிய போது பரிதாபம்
x
தினத்தந்தி 12 Oct 2018 3:45 AM IST (Updated: 12 Oct 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டையில் ஸ்கூட்டர் மீது அரசு பஸ் மோதியதில் வங்கிக்கு சென்று விட்டு திரும்பிய பெண் பரிதாபமாக இறந்தார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை கணேஷ்நகர் 1-ம் வீதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் அரிசி கடை வைத்துள்ளார். இவருடைய மகள் தமிழ்செல்வி(வயது 30). இவர் நேற்று தனது வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் புதுக்கோட்டை பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள தனியார் வங்கிக்கு சென்றார். பின்னர் அங்கு வேலையை முடித்து விட்டு அதே ஸ்கூட்டரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வந்த போது பட்டுக்கோட்டையில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த அரசு பஸ் தமிழ்செல்வி ஓட்டி வந்த ஸ்கூட்டர் மீது மோதியுள்ளது.

இதில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட தமிழ்செல்வி படுகாயமடைந்தார். இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் தமிழ்செல்வியை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே தமிழ்செல்வி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story