தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஒப்பந்த பெண் ஊழியர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவு


தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஒப்பந்த பெண் ஊழியர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால் விபரீத முடிவு
x
தினத்தந்தி 12 Oct 2018 4:30 AM IST (Updated: 12 Oct 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

பாண்டவபுராவில், தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் ஒப்பந்த பெண் ஊழியர் அதிக அளவில் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வங்கிகள் கடன் கொடுக்க மறுத்ததால் இந்த விபரீத முடிவை தேடிக் கொண்டார்.

மண்டியா,

தோட்டக்கலை துறை அலுவலகத்தில் ஒப்பந்த பெண் ஊழியர் தூக்க மாத்திரைகளை தின்று தற்கொலை, இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- மண்டியா மாவட்டம் பாண்டவபுரா அருகே உள்ள சுப்ரமணய்பீதி பகுதியைச் சேர்ந்தவர் சைத்ரா(வயது 35). இவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. குடும்ப பிரச்சினை காரணமாக இவர் தனது கணவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டார். அதுமுதல் இவர் தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

மேலும் இவர் பாண்டவபுராவில் உள்ள தோட்டக்கலைத்துறையில் ஒப்பந்த அடிப்படையில் கணினி ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவருடைய தம்பி ஜெயந்த், சொந்தமாக தொழில் தொடங்க திட்டமிட்டார். அதற்கு பண உதவி செய்வதற்காக சைத்ரா, வங்கிகளில் கடனுதவி பெற முயன்றார். ஆனால் வங்கிகள், சைத்ராவின் விண்ணப்பங்களை நிராகரித்தன. மேலும் அவருக்கு கடன் கொடுக்க வங்கிகள் மறுத்தன. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் சைத்ரா வழக்கம்போல் வேலைக்கு வந்தார். ஆனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதற்காக அவர் அலுவலக மாடிக்கு சென்று அங்கு அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்றார். சிறிது நேரத்தில் அவர் அங்கேயே மயங்கி விழுந்து இறந்தார். நீண்ட நேரமாகியும் சைத்ரா மாடியில் இருந்து வராததால், அங்கிருந்த மற்ற ஊழியர்கள் மாடிக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு சைத்ரா இறந்து கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் இதுபற்றி அவர்கள் பாண்டவபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் சைத்ராவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதத்தையும் கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் அவர், தனது குடும்பத்திற்கு உருக்கமாக ஒரு கடிதம் எழுதி வைத்தார். அதில், ‘‘தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும், தனக்கு வங்கிகள் கடனுதவி அளிக்க மறுத்ததால்தான் தற்கொலை முடிவை தேடிச் செல்வதாகவும்’’ கன்னடத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

அதையடுத்து சைத்ராவின் உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story