கொடைக்கானல் ஏரியை ஆழப்படுத்த ஒதுக்கிய ரூ.89 கோடி எங்கே? அறிக்கை அளிக்க பொதுநிறுவனங்கள் குழு உத்தரவு


கொடைக்கானல் ஏரியை ஆழப்படுத்த ஒதுக்கிய ரூ.89 கோடி எங்கே? அறிக்கை அளிக்க பொதுநிறுவனங்கள் குழு உத்தரவு
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM (Updated: 11 Oct 2018 8:48 PM)
t-max-icont-min-icon

கொடைக்கானல் நட்சத்திர ஏரியை ஆழப்படுத்தி புனரமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.89 கோடி என்ன ஆனது? என்பதை அறிக்கையாக அளிக்குமாறு அதிகாரிகளுக்கு பொதுநிறுவனங்கள் குழு உத்தரவிட்டது.

திண்டுக்கல், 


தமிழ்நாடு சட்டப்பேரவை மூலம் அமைக்கப்பட்ட பொதுநிறுவனங்கள் குழுவின் தலைவர் செம்மலை எம்.எல்.ஏ. தலைமையில் சண்முகம், பாண்டியன், இ.பெ.செந்தில்குமார், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிச்சாண்டி, செழியன், நல்லதம்பி ஆகிய உறுப்பினர்கள் நேற்று முன்தினம் திண்டுக்கல் வந்தனர். இவர்கள், திண்டுக்கல் அரசு மருத்துவமனை, பழனி முருகன் கோவில், அரசு போக்குவரத்து கழக பணிமனைகள் உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
இந்தநிலையில், நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் டி.ஜி.வினய், பொதுநிறுவனங்கள் குழு செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் துறை ரீதியான பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அப்போது, திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தோல் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் செங்குளத்தில் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருகிறது. இதனை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அதிகாரிகள், கடந்த காலங்களை விட தற்போது சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் வெளியேறும் அளவு குறைக்கப்பட்டுள்ளது என்றனர். இதைத்தொடர்ந்து, சுத்திகரிக்காமல் கழிவுநீர் வெளியேறுவதை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

இதேபோல, கொடைக்கானல் விடுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நட்சத்திர ஏரியில் கலப்பதால் மாசடைந்து வருகிறது. குளத்தூர் காளனம்பட்டி மற்றும் வேடசந்தூர் ஆத்துமேடு பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மாசடைவதாக புகார் எழுந்துள்ளது. இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

மேலும், ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது கொடைக்கானல் நட்சத்திர ஏரியை ஆழப்படுத்தி புனரமைக்க ரூ.89 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியிட்டார். அந்த நிதி என்ன ஆனது என்பதை நகராட்சி அதிகாரிகள் அறிக்கையாக தெரிவிக்க வேண்டும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு பொதுநிறுவனங்கள் குழு உத்தரவிட்டது.

இதற்கிடையே, பொது நிறுவனங்கள் குழு தலைவரிடம் வேடசந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. பரமசிவம் ஒரு மனு கொடுத்தார். அதில், வேடசந்தூர் பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாய்கள் மற்றும் மோட்டார் பழுது காரணமாக சில கிராமங்களுக்கு குடிநீர் சென்றடையவில்லை. இதனை சரிசெய்ய வேண்டும். மேலும், பல கிராமங்களில் பஸ் வசதி இல்லாததால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, அந்த பகுதிகளுக்கு பஸ் வசதி கிடைக்கும் வகையில் 11 வழித்தடங்களை நீட்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இதேபோல பழனி தொகுதி எம்.எல்.ஏ. இ.பெ.செந்தில்குமார் கொடுத்த மனுவில், கொடைக்கானல் மேல்மலை பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களுக்கு பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும். ஒட்டன்சத்திரத்தில் இருந்து கொடைக்கானலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.

கூட்டத்தில், குழு சிறப்பு செயலாளர் வசந்திமலர், மாவட்ட வருவாய் அலுவலர் வேலு மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, கொடைக்கானலுக்கு சென்ற பொதுநிறுவனங்கள் குழுவினர் அங்குள்ள அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர்.

இதற்கிடையே, நிலக்கோட்டை கிளை நூலகத்தில் சட்டமன்ற பேரவை நூலகக்குழு தலைவர் அருண்குமார் எம்.எல்.ஏ. தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நூலகத்துக்கு கூடுதல் கட்டிடம் கட்ட வேண்டும். நீட் உள்பட பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு தேவையான புத்தகங்கள் வழங்க வேண்டும் என்று வாசகர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து கூடுதல் கட்டிடம் மற்றும் புத்தகங்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று குழுவினர் உறுதி அளித்தனர்.

அப்போது அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் யாகப்பன், தனது செலவில் புத்தகங்கள் வாங்கி தருவதாக கூறினார். இந்த ஆய்வின் போது நூலகக்குழு உறுப்பினர்களான ரவிசந்திரன், கலைச்செல்வன், கார்த்திகேயன், செல்வமோகன்தாஸ், கிரி, நீதிபதி, லோகநாதன் மற்றும் தாசில்தார் நவநீதகிருஷ்ணன் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து, திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் துறை ரீதியான பணிகள் குறித்து அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

Next Story