ஆற்றில் பிணமாக கிடந்தார் மில் தொழிலாளி கொலையா? போலீசார் தீவிர விசாரணை
ஆனைமலை அருகே ஆழியாறு ஆற்றில் பிணமாக கிடந்த மில்தொழிலாளி கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலை,
ஆனைமலையை அடுத்த சின்னப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் முருகானந்தம் (வயது 24). இவர் ஜமீன் முத்தூரில் உள்ள தனியார் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு போடிபாளையத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மகள் அஸ்வதி (20) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். முருகானந்தம், அஸ்வதி தம்பதியினர் சின்னப்பம்பாளையத்திலேயே தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி காலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற முருகானந்தம் வெகுநேரம் ஆகியும் வீடுதிரும்ப வில்லை. அவரது செல்போனும் ஆப் செய்து வைக்கப்பட்டிருந்தது. அவர் வேலை பார்க்கும் மில்லில் விசாரித்தபோது முருகானந்தம் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது.
இதனையடுத்து அஸ்வதி தனது கணவரை காணவில்லை என்று ஆனைமலை போலீசில் புகார் கொடுத்தார். முருகானந்தத்தின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் போலீசார் அவரை தேடினர். இந்த நிலையில் சுந்தரபுரி அருகே ஆழியாறு ஆற்றில் முருகானந்தம் பிணமாக கிடப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்த முருகானந்தத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் முருகானந்தம் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து வீசப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:-
முருகானந்தம் வேலை பார்த்த மில்லில் ஆனைமலை நெல்லுக்குத்தி பாறையைச் சேர்ந்த பாஷா என்பவர் ஒப்பந்த அடிப்படையில் சரக்கு வாகனங்களை ஓட்டி வருகிறார். அவரிடம் வேலை பார்க்கும் லோகநாதன், அதே மில்லில் வேலை பார்க்கும் சுப்புராஜ் ஆகியோர் நண்பர்கள் ஆவர். சமீபத்தில் பாஷாவின் இரு சக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு சென்ற முருகானந்தம் அதனை திருப்பி கொடுக்கச் செல்லும்போது மாடு ஒன்றின் மீது வாகனம் மோதி சேதமடைந்தது. அதனை சரிசெய்ய ரூ.2 ஆயிரம் கொடுக்கவேண்டும் என்று பாஷா கூறியதாகவும், அதனை கொடுக்க தாமதம் ஆனதால் பாஷா தனது நண்பர் ஒருவருடன் சின்னப்பம்பாளையத்தில் உள்ள முருகானந்தத்தின் வீட்டிற்கு சென்று தகாத வார்த்தைகளில் பேசி தகராறில் ஈடுபட்டதாகவும், ஆகவே கணவர் சாவில் மர்மம் உள்ளது என்று அவரது மனைவி அஸ்வதி புகாரில் கூறி இருந்தார்.
இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில் சம்பவத்தன்று வேலைக்குச் செல்வதாக கூறிச்சென்ற முருகானந்தம் சுப்புராஜூடன் சேர்ந்து சுந்தரபுரி அருகே உள்ள ஆழியார் ஆற்றங்கரையில் மது அருந்தியுள்ளார். அதன் பிறகு சுப்புராஜ் மட்டும் அங்கிருந்து சென்று விட்டதாகவும் மது போதையில் முருகானந்தம் ஆற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. ஆனால் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ததில் பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டன. ஆற்றில் முருகானந்தம் வெறும் ஜட்டியுடன் பிணமாக கிடந்தார். அப்படியானால் அவரது உடைகள் கரையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அவரது உடைகள், அவர் வழக்கமாக அணியும் கண் கண்ணாடி ஆகியவை அங்கே இல்லை. அந்த இடத்தில் காலி மது பாட்டில்கள், கோழி இறைச்சி துண்டுகள் மட்டுமே கிடந்தன.
வீட்டில் இருந்து வெளியே சென்ற 9-ந் தேதியன்று மதியம் முருகானந்தம் தனது மொபட்டில் ஆனைமலை முக்கோணம் வந்து ஒரு கோழிக்கடையில் கோழி இறைச்சி வாங்கிச் சென்றுள்ளார். ஆற்றங்கரையில் அதனை நண்பர்களுடன் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு மது அருந்தியுள்ளார். அவருடன் யார்? யார் சென்றனர் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். மேலும் சம்பவ இடத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு வாய்க்காலில் முருகானந்தத்தின் மொபட் விழுந்து கிடந்தது. அதனையும் பறிமுதல் செய்துள்ளோம். அவரது சாவில் பல்வேறு மர்மங்கள் உள்ளதால், கொலையா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீசார் கூறினார்கள்.
இதற்கிடையில் முருகானந்தம் இறந்த தகவல் அறிந்து அவரது உறவினர்கள், நண்பர்கள் திரளானபேர் ஆனைமலை போலீஸ் நிலையம் முன்பு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முறையான விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்ததை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story