மாதத்திற்கு 5 பள்ளிகளில் மாணவர்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்


மாதத்திற்கு 5 பள்ளிகளில் மாணவர்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Oct 2018 4:30 AM IST (Updated: 12 Oct 2018 2:21 AM IST)
t-max-icont-min-icon

மாதத்திற்கு 5 பள்ளிகளை தேர்வு செய்து மாணவர்களிடம் மதுவின் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அன்பழகன் அறிவுறுத்தினார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் மது பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கவும், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி மது பழக்கத்தில் ஈடுபடாமல் இருப்பதை உறுதி செய்து நடவடிக்கையினை மேற்கொள்ளும் விதமாக அரசுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசியதாவது:- மது அருந்துவதால் ஏற்படும் குற்றங்கள் அதிகமாக உள்ள இடங்களை கண்டறிந்து அப்பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் நடத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாது மது பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் கலந்துகொள்ளும் விழிப்புணர்வு ஊர்வல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகளை பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் வழங்க வேண்டும்.

பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைக்கப்படவேண்டும். மேலும் அரசுப்பொருட்காட்சி நடைபெற்று வரும் திருவள்ளுவர் மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா கலையரங்கத்தில் விழிப்புணர்வு நாடகங்கள், கலை நிகழ்ச்சிகளை நடத்தலாம். ஒரு மாதத்திற்கு 5 பள்ளிகள் வீதம் தேர்வு செய்து, மாணவர்களிடம் மது பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும், வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடன் இருக்க தேவையான வழிவகைகள் குறித்தும் மன நலத்திட்டத்தின் மூலம் எடுத்துரைக்க வேண்டும். மேலும் மாணவ- மாணவிகளிடையே மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதை தடுப்பது குறித்த வாசகங்கள் (ஸ்லோகன்) எழுதும் போட்டி, ஓவியப்போட்டி போன்ற போட்டிகளை நடத்தலாம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர்கள் சரவணமூர்த்தி, லியாகத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாரதி, உதவி ஆணையர் (கலால்) சைபுதீன், மாவட்ட மன நலத்திட்ட மருத்துவர் பாரதி, மனநல ஆலோசகர் மனோஜ் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story