வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி


வேகமாக பரவி வரும் பன்றிக்காய்ச்சலுக்கு 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 Oct 2018 10:00 PM GMT (Updated: 11 Oct 2018 9:08 PM GMT)

மும்பையில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இந்த காய்ச்சலுக்கு 2 பேர் பலியாகி உள்ளதாக மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் பருவமழை ஓய்ந்து விட்ட நிலையில், தற்போது கோடை காலம் போல் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இரண்டாவது அதிகபட்ச வெப்பநிலை கடந்த ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் ஓரளவு குறைந்தது. நேற்று வெப்பம் அதிகமாக இருந்தது. வெப்பநிலையில் ஏற்பட்டு வரும் ஏற்றம், இறக்கம் காரணமாக நகரில் வைரஸ் நோய்களால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

குறிப்பாக மும்பையில் பன்றிக்காய்ச்சல் நோய் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் 10 பேர் பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவர்களில் 2 பேர் உயிரிழந்து விட்டதாக மாநகராட்சி சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது. மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றி டாக்டர் ஒருவர் கூறுகையில், ‘‘பன்றிக்காய்ச்சல் இருமல், தும்மல் மற்றும் எச்சில் ஆகியவற்றில் இருந்து காற்று மூலம் பரவும் நோயாகும்.

எனவே இந்த நோயில் இருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்ள முன்னெச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வப்போது கைகளை கழுவி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.

காய்ச்சல் வந்தவுடன் சுயமாக மருந்து எடுத்து கொள்வதை தவிர்த்து உடனடியாக டாக்டரிடம் செல்ல வேண்டும்’’ என்றார்.'

Next Story